Monday, 27 March 2017

மின்சார வாரியப் பணிக்கான நேர்காணலில் முறைகேட்டை தடுக்க பா.ம.க போராட்டம்! -மருத்துவர். இராமதாஸ் ---- அறிக்கை----

மின்சார வாரியப் பணிக்கான நேர்காணலில்
முறைகேட்டை தடுக்க பா.ம.க போராட்டம்!
         -மருத்துவர். இராமதாஸ்
                  ---- அறிக்கை----

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உதவிப் பொறியாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல்கள்  சென்னை அரும்பாக்கத்தில் தி விஜய் பார்க் நட்சத்திர விடுதியில் நாளை மறுநாள் முதல் நடைபெறுவதை சுட்டிக்காட்டி, ஊழலுக்கு வழி வகுக்கும் இந்த முறையை ரத்து செய்யும்படி வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதற்கு மாறாக இன்னும் கூடுதல் மோசடியை செய்யும் முயற்சியில் மின்வாரியம் இறங்கியுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாலும், தனியார் விடுதிகளில் நேர்காணல்களை நடத்தும்போது முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாலும் அந்த முயற்சியை கைவிட்டு, மின்வாரிய தலைமை அலுவலகத்திலேயே நேர்காணலை நடத்த வேண்டும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன்.  தமிழ்நாடு மின்வாரியம் நேர்மையான அமைப்பாக இருந்திருந்தால் தனியார் நட்சத்திர விடுதியில் நேர்காணல் நடத்தும் திட்டத்தை கைவிட்டு, மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என்று அறிவித்திருக்க வேண்டும்.

ஆனால், மின் வாரியம் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, அரும்பாக்கம் விஜய் பார்க் நட்சத்திர விடுதியில் நடைபெற இருந்த நேர்காணலை வண்டலூர் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள கல்யாண் ஹோம்டெல் என்ற நட்சத்திர விடுதிக்கு மாற்றியிருக்கிறது. பரபரப்பு மிகுந்த சென்னையின் மையப்பகுதியிலுள்ள நட்சத்திர விடுதியில்  நேர்காணலை நடத்துவதை விட, புறநகர் பகுதியில் தனித்த இடத்தில் உள்ள நட்சத்திர விடுதியில்  நேர்காணலை நடத்தினால் பேரம் பேசுவதற்கு வசதியாக இருக்கும் என்பது தான் இந்த இடமாற்றத்துக்கு காரணமாக இருக்க வேண்டும் என்று நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட பலரும் குற்றஞ்சாற்றியுள்ளனர்.

மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கக் கூடாது என்பதாலும், அரசின் நிர்வாகச் செலவுகளை குறைக்க வேண்டும் என்பதாலும் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கும் கலந்தாய்வுக் கூட்டங்கள், அரசு நிகழ்ச்சிகளைக் கூட தனியார் நட்சத்திர விடுதிகளில் நடத்தக்கூடாது என்றும், அரசு அலுவலகங்களில்  மட்டுமே நடத்த வேண்டும் என்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டங்களைக்  நட்சத்திர விடுதிகளில் நடத்துவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவ்வாறு இருக்கும் போது, உதவிப் பொறியாளர்கள் நியமனத்திற்கான நேர்காணலை தனியார் நட்சத்திர விடுதியில் தான் நடத்துவோம் என்று மின்சாரவாரியம் பிடிவாதம் காட்டுவது ஏன்?

மின்வாரிய உதவிப் பொறியாளர்கள் நியமனத்திற்காக ஏராளமானவர்களிடம் ரூ. 20 லட்சம் வரை பேரம் பேசப்பட்டிருப்பதாகவும், பணம் கொடுக்க ஒப்புக்கொண்டவர்களுக்கு எப்படியாவது வேலை வழங்கிவிட வேண்டும் என்பதற்காகவே தனியார் நட்சத்திர விடுதியில் நேர்காணல் நடத்தப்படுவதாகவும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. இவற்றை அவ்வளவு எளிதாக புறந்தள்ளி விட முடியாது. எத்தனை கோணத்தில் ஆராய்ந்தாலும் தனியார் நட்சத்திர விடுதியில் நேர்காணல் நடத்துவதை நியாயப்படுத்த முடியவில்லை. ஏற்கனவே நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதைப் போன்று, மின் வாரிய  தலைமை அலுவலகத்தில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்ட அறையில் நேர்காணலை நடத்துவதை விடுத்து   தனியார் நட்சத்திர விடுதியில் நேர்காணலை நடத்துவதன் நோக்கம் தரகர்கள் தடையின்றி நடமாடவும், நேர்காணலுக்கு வருபவர்களிடம் அந்த இடத்திலேயே பேரம் பேசுவதற்கும் வசதி செய்தி தருவதும் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? மின்வாரிய உதவிப் பொறியாளர்கள் நியமனத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெறப்போவதற்கு இது தான் சிறந்த ஆதாரமாகும்.

தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறும் பொதுத்துறை நிறுவனங்களில் மின்வாரியம்  முன்னணியில் உள்ளது. கடந்த காலங்களில் தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதில் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றுள்ளன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, உதவிப் பொறியாளர்கள் நியமனத்தில்  முறைகேடுகள் நடைபெறக் கூடும் என்ற குற்றச்சாற்று நம்பும்படியாகத் தான் உள்ளது. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பதைப் போன்று, தமிழ்நாடு மின்வாரியம் உள்ளிட்ட அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்கள் ஐயத்திற்கு அப்பாற்பட்டவையாக இருக்க வேண்டியது அவசியம்.

எனவே, தனியார் நட்சத்திர விடுதியில் நாளை மறுநாள் முதல் நடைபெறவுள்ள நேர்காணல்களை மின்வாரியத் தலைமை அலுவலகத்துக்கோ அல்லது அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கோ மாற்ற  வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், மின்வாரிய உதவிப் பொறியாளர் நியமனத்தில் ஊழலும், முறைகேடுகளும் நடப்பதைத் தடுக்கும் வகையில் நேர்காணல் நடைபெறவிருக்கும் வண்டலூர் தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக மாணவர் சங்கம் சார்பில் அறப்போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன்.

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! வாஜ்பாய் அரசைக் கவிழ்த்த ஜெயலலிதா! -மருத்துவர். இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!

வாஜ்பாய் அரசைக் கவிழ்த்த ஜெயலலிதா!
   -மருத்துவர். இராமதாஸ்

ஜெயலலிதா அரசியல் முதிர்ச்சியற்றவர் என்பதற்கு 1998-ஆம் ஆண்டில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெற்ற பிறகு அவர் நடந்து கொண்ட விதம் தான் காரணம் ஆகும். இன்னும் கேட்டால், மத்தியில் வாஜ்பாய் அரசு பதவியேற்பதற்கு முன்பாகவே ஜெயலலிதாவின் சிறுபிள்ளைத்தனமான சித்து விளையாட்டுகள் ஆரம்பமாகிவிட்டன.

வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசுக்கு ஜெயலலிதா ஆதரவு கொடுக்க முன்வந்ததற்கு காரணமே தம்மீதான ஊழல் வழக்குகளையெல்லாம் வாபஸ் பெற வேண்டும்; கலைஞர் தலைமையிலான திமுக அரசைக் கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்தி தாம் மீண்டும் முதல்வர் ஆக வேண்டும் என்ற நினைப்பு தான்.

ஜெயலலிதாவின் குணம்

ஜெயலலிதாவுக்கு எப்போதுமே அவர் நினைப்பதை அடைய வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்குமே தவிர, அவையெல்லாம் யதார்த்தமான ஆசைகளா? அவை நிறைவேற சாத்தியங்கள் உள்ளனவா? என்பதைப் பற்றியெல்லாம் அவர் சிந்திக்கமாட்டார். 1989-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு காங்கிரஸ் கட்சியுடன் அவசர அவசரமாக கூட்டணி வைத்துக் கொண்டதற்கு காரணமே எப்படியாவது திமுக அரசைக் கலைத்து விட்டு முதலமைச்சராக வேண்டும் என்பது தான். அப்போதிருந்த அரசியல் சூழலில் அது சாத்தியமும் ஆனது.

ஆனால், 1994-ஆம் ஆண்டில் கர்நாடக அரசு கலைக்கப்பட்டது தொடர்பான எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மாநில அரசுகளை கலைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என்ற நிலை ஏற்பட்டது. நியாயம்  இல்லாமல் ஒரு மாநில அரசை மத்திய அரசு கலைத்தால், அதற்காக மத்திய அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்ததுடன், கலைக்கப்பட்ட அரசை மீண்டும் பதவியில் அமர்த்திய முன்னுதாரணங்களும் பின்னாளில் ஏற்பட்டன.

பதவியேற்பு தாமதம்

இதையெல்லாம் புரிந்துகொள்ளும் சக்தியும், பொறுமையும் ஜெயலலிதாவுக்கு இல்லை என்பது தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும். 1998&ஆம் ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும், அதன்பின் இரு வாரங்கள் கழித்து மார்ச் 19&ஆம் தேதி தான் வாஜ்பாய் அரசு பதவியேற்க முடிந்தது. இதற்கு காரணம், கலைஞர் ஆட்சியை கலைப்பதாக வாஜ்பாய் வாக்குறுதி அளித்தால் மட்டுமே ஆதரவுக் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் கொடுக்க முடியும் என்று ஜெயலலிதா பிடிவாதம் பிடித்தது தான்.

அதன்பின் அதிமுக அமைச்சர்களுக்கு ஜெயலலிதா கேட்டு வாங்கிய துறைகள் அனைத்துமே ஜெயலலிதாவை ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்க வைக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டவையாகத் தான் இருந்தன. சேடப்பட்டி முத்தையாவுக்கு தரைவழிப் போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டது. ஆனால், இத்துறைக்கும் ஜெயலலிதா வழக்குகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தம்பித்துரைக்கு சட்டத்துறை வழங்கப்பட்டது. ஜெயலலிதா வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களை கலைக்க வேண்டும்; ஜெயலலிதா மீதான வழக்குகளையெல்லாம்  செயலிழக்க வைக்க வேண்டும் என்பது தான் தம்பித்துரைக்கு ஜெயலலிதா கொடுத்த பணியாகும்.

ஜெயலலிதாவின் திட்டம்

இணையமைச்சர்கள் இருவரில் ஒருவரான ஆர்.கே. குமாருக்கு நிதித்துறை வழங்கப்பட்டதற்கு காரணம் வருமானவரித்துறை குறித்த வழக்குகளை சரி செய்து தர வேண்டும் என்பதற்காகத் தான். இன்னொரு இணையமைச்சரான கடம்பூர் ஜனார்த்தனனுக்கு பணியாளர்நலத்துறை ஒதுக்கப்பட்டது. அத்துறையின் கட்டுப்பாட்டில் தான் சி.பி.ஐ. இயங்கும் என்பதால் அவருக்கு அத்துறை வழங்கப்பட்டது. இவர்களின் உதவியுடன் வழக்குகளை உடைப்பது, சுப்பிரமணியசுவாமி மூலமாக வாஜ்பாய் உதவியுடன் கலைஞர் அரசை கலைப்பது தான் ஜெயலலிதாவின் திட்டம் ஆகும்.

ஆனால், பதவியேற்ற ஒரு மாதத்திலேயே சொத்துக்குவிப்பு வழக்கில் சேடப்பட்டி முத்தையா மீது குற்றச்சாற்றுகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியதால் சேடப்பட்டி பதவி விலகினார். அதற்கு பதிலடி தரும் வகையில் கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்கள் பூட்டாசிங், ராமகிருஷ்ணஹெக்டே, ராம்ஜெத்மலானி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தினார். இதனால் மத்திய அரசுக்கும்,  ஜெயலலிதாவுக்கும் இடையே உறவு மிகவும் மோசமடைந்தது.

அமைச்சர் பதவி நீக்கம்

எனினும், மத்திய நிதித்துறை இணையமைச்சராக இருந்த ஆர்.கே.குமாரை அழைத்த ஜெயலலிதா தமது வருமானவரி வழக்குகளை விசாரித்த அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி ஆணையிட்டார். ஆனால், அதை குமார் சரியாக செய்யவில்லை. இதையடுத்து குமாரை தமது இல்லத்திற்கு அழைத்த ஜெயலலிதா கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. ஆர்.கே. குமார் பாரதிய ஜனதாவின் கைப்பாவையாக மாறிவிட்டார் என்று அவருக்கு ஏற்பட்ட சந்தேகம் தான் இதற்கு காரணம் ஆகும். இதனால் மனமுடைந்த குமார் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதும் கோபம் தீராத ஜெயலலிதா அமைச்சர் பதவியிலிருந்தும் விலகும்படி  குமாருக்கு ஆணையிட்டார். இதைத்தொடர்ந்து 1998-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்தவாறே குமார் பதவி விலகினார். அதைத்தொடர்ந்து குமாரிடம் இருந்த துறைகள் இன்னொரு இணை அமைச்சரான கடம்பூர் ஜனார்த்தனத்துக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டன.

அந்த நேரத்தில் மத்திய அரசு மீது ஜெயலலிதா கோபமாக இருப்பதை அறிந்த பிரதமர் வாஜ்பாய், மூத்த மத்திய அமைச்சரான ஜஸ்வந்த்சிங்கை அனுப்பி சமாதானப்படுத்தினார். அப்போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளை மேற்பார்வையிட்டு வந்த ஆணையாளர் எஸ்.சி. ஜாதவ் மும்பையில் சிறந்த பதவி எனக் கருதப்படும் ஒரு பதவிக்கு மாற்றப்பட்டார். அவருடைய பதவியை கே.கோபாலன் என்பவர் ஏற்றுக்கொண்டார். நேர்மையுடன் செயல்படக் கூடியவரான பி.கே. ஸ்ரீதரன் வேறு ஒரு முக்கிய பொறுப்புக்கு மாற்றப்பட்டார். அவரது இடத்துக்கு என்.பி. திரிபாதி என்பவர் நியமிக்கப்பட்டார். இப்படிப்பட்ட மாறுதல்கள் மூலம் ஜெயலலிதாவும், சசிகலாவும் அவருடைய உறவினர்களும் ஒரு தற்காலிக விடுதலையை அடையக்கூடும் என்று வருமான வரித் துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். ஆனால், அதைப் பற்றியெல்லாம் மத்திய ஆட்சியாளர்கள் கவலைகொள்ளவில்லை.

யஷ்வந்த் சின்ஹா வாக்குமூலம்

அதன்பின்னர் ஜெயலலிதா அடிக்கடி மத்திய அரசு மீது கோபம் கொள்வதும், அவரை சமாதானப்படுத்த  மத்திய அமைச்சர்கள் சென்னைக்கு வந்து செல்வதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. ஜஸ்வந்த் சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் மாதத்திற்கு ஒருமுறை ஜெயலலிதாவை சந்திப்பது வழக்கமான நடைமுறையாகிவிட்டது. ஒருமுறை மத்திய நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா வாஜ்பாயின் ஆணைப்படி ஜெயலலிதாவை அவரது போயஸ்தோட்ட இல்லத்தில் சந்தித்து பேசினார். அதுகுறித்து தாம் எழுதிய ஒரு சுதேசி சீர்திருத்தவாதியின் வாக்குமூலம் Confessions Of Swadhesi Reformer என்ற நூலில் குறிப்பிட்டிருந்தார். ‘‘ சென்னையில் காலையில் என்னுடைய நிகழ்ச்சிகள் முடிந்தவுடன், நான் ஜெயலலிதா வீட்டிற்குச் சென்றேன். நல்லவேளையாக அங்கே எந்த புகைப்படக்காரரும் காத்திருக்கவில்லை. ஜெயலலிதா இருந்த அறைக்கு நான் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, மதிய உணவு அருந்தினோம். மூன்று பேர் மட்டுமே சாப்பிட்டோம் - ஜெயலலிதா, திலிப் ரே (நிலக்கரித்துறை இணை அமைச்சர்), நான். சாப்பாடு நன்றாக இருந்தது. நான் புறப்படும்போது என்னிடம் ஜெயலலிதா ஒரு கவரைக்கொடுத்தார். பிறகு நான் அதனைத் திறந்து பார்த்த போது அவருடைய வருமான வரி வழக்குகள் பற்றிய குறிப்புகள் இருந்தன. சில நாட்கள் கழித்து நான் பிரதமரைச் சந்தித்தேன். சென்னையில் ஜெயலலிதாவுடன் நடந்த பேச்சுவார்த்தை விவரங்களை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் ஜெயலலிதா கொடுத்த கவர் பற்றி சொல்ல மறந்து விட்டேன். அப்போது பிரதமர் (வாஜ்பாய்) ஜெயலலிதா கொடுத்த கவரில் என்ன விஷயங்கள் இருந்தன? என்றார். நான் திடுக்கிட்டுப் போனேன். நாட்டில் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள பிரதமர் நினைத்தால் அது முடியுமென்பதை அறிந்து கொண்டேன்’’ என்று தமது நூலில் சின்ஹா கூறியிருந்தார்.

ஆலோசனைகளை மதிக்காதவர்

ஒருகட்டத்தில் திமுக அரசைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வாஜ்பாய் அரசு ஏற்காது என்பதை உணர்ந்து கொண்ட ஜெயலலிதா, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற முடிவு செய்தார். இதுகுறித்து விவாதிக்க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை பலமுறை தமது இல்லத்தில் கூட்டினார். ஆதரவு வாபஸ் என்ற பேச்சை அவர் எடுக்கும்போதெல்லாம் அது தவறான முடிவு என்பதை நான் சுட்டிக்காட்டுவேன். நமது அணிக்கு வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்யாமல், மத்திய அரசை கவிழ்க்க முயலக்கூடாது என்று வலியுறுத்துவேன். அரைகுறை மனதுடன் அதை அவர் ஏற்றுக் கொள்வார். ஒரு கட்டத்திற்கு மேல் அதுவும் சாத்தியமில்லாமல் போய்விட்டது.

1999-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே என்னுடனும், பிற கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும்  விவாதிப்பதை அவர் குறைத்துக் கொண்டார். அந்த ஆண்டு மார்ச் 26 முதல் 30 வரை தில்லியில் முகாமிட்டிருந்த ஜெயலலிதா, அங்கு பல தலைவர்களுடன் பேச்சு நடத்தியதன் அடிப்படையில் வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற முடிவு செய்தார். பின்னர் சென்னை திரும்பிய ஜெயலலிதா இதுகுறித்து என்னுடனோ மற்ற தலைவர்களுடனோ விவாதிக்கவில்லை. மாறாக, ஏப்ரல் 5-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டிய ஜெயலலிதா அதில் என்னையும், மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் இரண்டாம் கட்ட தலைவர்கள் மூலம் கடுமையாக திட்ட வைத்தார்.

வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது

அடுத்த நாள் ஏப்ரல் 6-ஆம் தேதி சுப்பிரமணியன் சுவாமி ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அடுத்த சில நாட்களில் தில்லியில் சுப்பிரமணியன் சுவாமி ஏற்பாடு செய்த தேநீர் விருந்தில் கலந்து கொண்ட ஜெயலலிதா அங்கு நடந்த ஆலோசனையின்படி ஏப்ரல் 14-தேதி குடியரசுத் தலைவர் கே.ஆர், நாராயணனை சந்தித்து வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.  இதையடுத்து வாஜ்பாய் அரசுக்கு திமுக ஆதரவளிக்கும்  என்று கலைஞர் அறிவித்தார். ஆனாலும் ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.

உண்மையில் ஜெயலலிதாவின் நோக்கம் என்னவென்றால், வாஜ்பாய் அரசை கவிழ்த்துவிட்டு, காங்கிரஸ் தலைமையில் மாற்று அரசு அமைத்து, கலைஞர் அரசைக் கலைக்க வேண்டும் என்பது தான். ஆனால், மாற்று அரசில் மாநில கட்சிகளான அ.தி.மு.க., -சமாஜ்வாதி போன்ற கட்சிகளை சேர்க்க முடியாது ; வெளியில் இருந்து ஆதரவு தாருங்கள் என சோனியா கூறிவிட்டார். இதனால் சோனியா- ஜெயலலிதா இடையே மோதல் ஏற்பட்டது. ஜெயலலிதா ஆதரவின்றி வேறு யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்பதால் புதிய அரசு அமைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன. அடுத்த 6 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டு, வாஜ்பாய் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. மேலும், அந்த தேர்தலில் திமுக, பா.ம.க. அங்கம் வகித்த தேசிய ஜனநாயக் கூட்டணியிடம் அதிமுக அணி படுதோல்வியடைந்தது.

Sunday, 26 March 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! கூட்டணியால் கிடைத்த வெற்றி! -மருத்துவர். இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!

கூட்டணியால் கிடைத்த வெற்றி!
-மருத்துவர். இராமதாஸ்

1996 சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததுடன், பத்துக்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகளை ஜெயலலிதா எதிர்கொண்டு வந்தார். ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதால் ஓராண்டுக்குள் அனைத்து வழக்குகளும் விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்டு விடும் என்று செய்திகள் பரப்பப்பட்டன. இவற்றையெல்லாம்  வைத்துப் பார்க்கும் போது தமிழக அரசியல் அரங்கில் ஜெயலலிதா ஒழிக்கப்பட்டு விடுவார் என்பதே அனைவரின் கருத்துமாக இருந்தது.

ஜெயலலிதாவின் கவலை

தேர்தல் தோல்வி மற்றும் ஊழல் வழக்குகளால் ஜெயலலிதாவும் துவண்டு போயிருந்தார். இவற்றில் இருந்து மீண்டு வரவேண்டும் என்றால் ஒரு தேர்தல் வெற்றி தேவை என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆனால், அப்போது தான் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டிருந்தது என்பதால் உடனடியாக தேர்தல் வருவதோ, தமது அரசியல் எதிர்காலம் துளிர்ப்பதோ சாத்தியமில்லை என்றே ஜெயலலிதாவும் நம்பினார்.

ஆனால், அரசியல் சாதகக் காற்று அவரை நோக்கி வீசியது. மத்தியில் முதலில் தேவகவுடா தலைமையில் அமைக்கப்பட்ட ஐக்கிய முன்னணி ஆட்சி, காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியுடனான மோதலால் ஓராண்டு கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. பத்து மாதங்கள் மற்றும் 11 நாட்களில் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து தேர்தலை சந்திக்க எந்தக் கட்சியும் தயாராக இல்லை என்பதால் ஐக்கிய முன்னணி சார்பில் வேறு ஒருவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் அவரை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி அறிவித்தார்.

மூப்பனாருக்கு பதவி மறுப்பு

இதைத் தொடர்ந்து ஐக்கிய முன்னணி சார்பில் பிரதமர் பதவிக்கு மூப்பனாரை முன்னிறுத்த ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால், காங்கிரஸ்காரரான அவரை பிரதமர் பதவியில் அமர்த்தக்கூடாது  என்று மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்க காரணமே திமுக தலைவர் கலைஞர் தான் என்றும், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தம்மைவிட பெரிய பதவிக்கு வருவதை கலைஞர் விரும்பவில்லை என்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் கருதினார்கள். தலைவர்கள் நிலையில் இந்த குற்றச்சாற்று வெளிப்படையாக கூறப்படவில்லை என்றாலும் கூட கீழ்மட்ட தலைவர்கள் இக்குற்றச்சாற்றை வெளிப்படையாக கூறினார்கள்.

மற்றொரு பக்கம் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டார்.  அவரை ஆதரிக்க மார்க்சிஸ்ட் கட்சி முன்வந்தாலும் கூட, அவரது உறவினரும், பிகார் முதல்வருமான லாலுபிரசாத் யாதவ் முன்வரவில்லை. கடைசியில் ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஐ.கே.குஜ்ரால் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், மூப்பனார் பிரதமர் பதவிக்கு  தேர்வு செய்யப்படாததை கண்டிக்கும் வகையில் மத்திய அமைச்சரவையில் தமாகா சேரவில்லை. ஆனாலும்,  திமுக தலைவர் கலைஞர் இதுதொடர்பாக விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில்  தமாகா மீண்டும் சேர்ந்தது.

குஜ்ரால் அரசும் கவிழ்ந்தது

தேவகவுடா அமைச்சரவையில் ப.சிதம்பரம், எம்.அருணாச்சலம், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகிய நால்வர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். குஜ்ரால் அமைச்சரவையில் ஜெயந்திநடராஜன் கூடுதலாக சேர்த்துக் கொள்ளப்பட்டார். பிகு செய்ததற்கான வெகுமதியாகவே அது பார்க்கப்பட்டது.

ஆனால், குஜ்ரால் அரசும் அதிக காலம் நீடிக்கவில்லை. 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி குஜ்ரால் புதிய பிரதமராக பதவியேற்றார். அந்த ஆண்டு ஆகஸ்ட் 28&ஆம் தேதி, ராஜிவ் கொலையின் பின்னணி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் விடுதலைப்புலிகளுக்கும், கலைஞருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சீத்தாராம் கேசரி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்க பிரதமர் குஜ்ராலும் தயாராக இல்லை... திமுக தலைவர் கலைஞரும் தயாராக இல்லை. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சி 1997-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28&ஆம் தேதி குஜ்ரால் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கியது. இதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து குஜ்ரால் விலகினார்.

மக்களவைக்கு இருகட்ட தேர்தல்

வேறு எந்தக் கட்சியும் புதிய அரசு அமைக்கத் தயாராக இல்லாத நிலையில், மக்களவைக்கு 1998-ஆம் ஆண்டு பிப்ரவரி 16, 22 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மத்தியில் கூட்டணி ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கியதுமே ஜெயலலிதா தமிழக அரசியலில் காய்களை நகர்த்தத் தொடங்கினார். அதேநேரம் வலிமையான கூட்டணி இல்லாவிட்டால் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்காது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஜெயலலிதாவைப் பொறுத்தவரை ஒரு குணம் உண்டு.  காரியம் ஆக வேண்டுமென்றால் எந்த அளவுக்கும் பணிந்து போவார்... காரியம் முடிந்தால் யாரையும் மதிக்க மாட்டார்.
தமிழகத்தில் திமுக- தமாகா அணியை வீழ்த்த வலிமையான அணி தேவை என்பதை உணர்ந்த  ஜெயலலிதா பாட்டாளி மக்கள் கட்சியை அதிமுக அணியில் சேர்க்க விரும்பினார். அதற்கு முன்பாக  நாவலர் நெடுஞ்செழியன் மூலமாக மதிமுகவும், ஜனா.கிருஷ்ணமூர்த்தி மூலமாக பாரதிய ஜனதாவும் அதிமுக அணியில் சேர முடிவு செய்துவிட்டன. ஆனாலும் அதிமுக அணியில் சேருவதில் எனக்கு தயக்கம் இருந்தது.

அதிமுக அணியில் பாமக

ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடமிருந்து கூட்டணியில் இணைய தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. அக்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களும் கூட்டணியில் இணையும்படி அன்புத்தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திவாரி காங்கிரசில் இருந்து விலகி, தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சித் தொடங்கிய வாழப்பாடி இராமமூர்த்தியும் அதிமுக அணியில் சேரும்படி எனக்கு வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார்.  ஒருகட்டத்தில் கூட்டணிப் பேச்சுக்கள் தொடங்குவதன் அடையாளமாக சென்னை தேனாம்பேட்டையில்  உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்துக்கே ஜெயலலிதா வந்து, என்னையும் கட்சியின் மற்ற தலைவர்களையும் சந்தித்து அதிமுக தலைமையிலான அணியில் இணையும்படி வேண்டுகோள் விடுத்தார். அதைத்தொடர்ந்து அதிமுக அணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்தது.

அதேபோல், மதிமுக, பாஜக, தமிழக ராஜிவ் காங்கிரஸ், ஜனதாக் கட்சி ஆகிய கட்சிகளின் அலுவலகங்களுக்கும்  ஜெயலலிதா மரியாதை நிமித்தம் சென்று வந்தார். அதைத் தொடர்ந்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க., மதிமுக, பாஜக, தமிழக ராஜிவ் காங்கிரஸ், ஜனதாக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்தன. அதிமுக மொத்தம் 23 இடங்களில் போட்டியிட்டது. பா.ம.க., மதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு தலா 5 இடங்களும், தமிழக ராஜிவ் காங்கிரஸ், ஜனதா ஆகிய கட்சிகளுக்கு தலா ஓரிடமும் ஒதுக்கப்பட்டன.

அதிமுக அணி வெற்றி

திமுக அணியில் அக்கட்சிக்கு 18 இடங்களும், தமாகாவுக்கு 20 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரு இடங்களும் ஒதுக்கப்பட்டன. காங்கிரசும், திருநாவுக்கரசர் தலைமையிலான எம்ஜிஆர் அண்ணா திமுகவும் தனி அணியாகவும் போட்டியிட்டன. 1998 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி தொடங்கி நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற அதிமுகவின் வெள்ளிவிழாவில்  வாஜ்பாய், அத்வானி, ஜெயலலிதா, நான் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டோம்.தேர்தலுக்கு முன்பாக திமுக, தமாகா அணிக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் தொலைக்காட்சி மூலம் வாக்கு சேகரித்தார். அதற்கு முன்பாக 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் அத்வானி பிரச்சாரம் செய்யவிருந்த இடத்தில் குண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் அதிமுக அணி தமிழகத்தில் மொத்தம் 30 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 18 இடங்களையும், பா.ம.க. 4 இடங்களையும் வென்றன.  மதிமுக, பாஜக ஆகியவை தலா 3 இடங்களிலும், ராஜிவ் காங்கிரஸ், ஜனதாக் கட்சி ஆகிய கட்சிகள் தலா ஓரிடத்திலும் வென்றன. அதைத்தொடர்ந்து மத்தியில் அமைந்த வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தமிழகத்திலிருந்து அதிமுக, பா.ம.க., தமிழக ராஜிவ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இடம் பெற்றன.