Wednesday, 26 April 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! தோல்வியில் முடிந்த இணைப்பு முயற்சி! -மருத்துவர். இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
தோல்வியில் முடிந்த இணைப்பு முயற்சி!
-மருத்துவர். இராமதாஸ்

தமிழகத்தில் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியை வலிமையாக்கி ஆட்சியில் அமர்த்த வேண்டும், சசிகலா அணியை ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டும் என்பது தான் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் நோக்கமாக இருந்தது. சசிகலா அணிக்கும், பாரதிய ஜனதா மேலிடத்திற்கும் நிலவி வந்த பிரச்சினைகளும், பன்னீர்செல்வத்தின் கைகளில் அதிமுகவை ஒப்படைத்து விட்டால் 2019-தேர்தலில் அந்த அணியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பதும் தான் பாரதிய ஜனதாவின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணமாகும்.

பன்னீர்செல்வம் முயற்சி தோல்வி

அதற்காகத் தான் அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும், அவர் முதலமைச்சராக தடை இல்லாத சூழலிலும் அவரை பதவியேற்க அழைக்காமல் ஆளுனர் காலம் தாழ்த்தினார். காலம் தாழ்த்துவதால் கிடைக்கும் அவகாசத்தை பயன்படுத்தி சசிகலா அணியில் இருந்து கணிசமான சட்டப்பேரவை உறுப்பினர்களை அழைத்து வந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் பன்னீர்செல்வத்திற்கு பாரதிய ஜனதா அளித்த பணியாகும். அருணாச்சலப் பிரதேசத்தில்  எப்படி ஆட்சியமைத்ததோ, அதேபாணியைத் தான் தமிழகத்திலும் பாரதிய ஜனதா கடைபிடித்தது. ஆனால், அருணாச்சலப் பிரதேசத்தில் கிடைத்த வெற்றி தமிழ்நாட்டில் அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. பன்னீர்செல்வத்தால் 12 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மேல் பிரித்து வர முடியவில்லை.

ஆனாலும், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு கட்டவிழ்த்து விட்டது. அந்த வகையில் சசிகலா அணியினர் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் தான் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனை ஆகும்.

வருமானவரி சோதனை!

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் தினகரனுக்காக பண வினியோகம் செய்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் என்பதால், அவரை வளைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி தான் 07.04.2017 அன்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில்  வருமான வரித்துறை  சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் தினகரனுக்காக ஓட்டுக்கு ரூ.4000 வீதம் மொத்தம் ரூ.89 கோடி பணம் வினியோகம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக தெரிவித்த வருமானவரித்துறை, அது குறித்த ஆவணங்களை கசியவிட்டது. அதேநேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட மற்ற அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்பான ஏராளமான ஆதாரங்களும் வருமானவரித்துறைக்கு கிடைத்துள்ளன.

அந்த ஆவணங்களை வெளியில் விடாத மத்திய அரசு, அவற்றை வைத்துக் கொண்டு அரசியல் விளையாட்டுக்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகருக்கு தினகரன் ரூ.1.30 கோடி கையூட்டு கொடுத்த  விவகாரம் வெடித்தது தினகரனுக்கு நெருக்கடியை அதிகரித்தது மத்திய அரசு. அதிமுகவின் இரு அணிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தங்களின் கட்டுக்குள் வைத்துக் கொள்வது தான் மத்திய அரசின் புதிய திட்டமாகும். இந்த சித்து விளையாட்டில் அதிமுக நிர்வாகிகள் சிலருக்கும், சசிகலா உறவினர்கள் பலருக்கும் தொடர்பு உண்டு.

இரு தரப்பிலும் குழுக்கள் அமைப்பு

அதிமுக நிர்வாகிகள் இந்த இணைப்பு முயற்சிக்கு ஆர்வம் காட்டியதற்கு பல காரணங்கள் உள்ளன.  இரு அணிகளும் இணைந்தால் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அது எதிர்கால வெற்றிகளுக்கு உதவியாக இருக்கும் என்பது அவற்றில் ஒரு காரணம் ஆகும்.  இரு அணிகளாக பிரிந்ததால், பன்னீர்செல்வம் அணியில் பதவியின்றி தவித்த பல தலைவர்கள் ஏதேனும் ஒரு பதவியை கைப்பற்றி பணம் ஈட்ட வேண்டும் என்று ஏங்கியது இன்னொரு காரணம் ஆகும்.

அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது குறித்து பேச்சு நடத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டாலும் கூட இரு தரப்பையும் சேர்ந்த சிலர் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தினார்கள். ஆனாலும் அந்தக் குழப்பங்களைத் தீர்த்து, முறைப்படியான பேச்சுக்களை நடத்த கடந்த 21.04.2017 அன்று இரு அணிகளின் சார்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன. சசிகலா அணி சார்பில் மாநிலங்களவை  உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி. சண்முகம், கே.சி.வீரமணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதேநேரத்தில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் சசிகலா அணியினர் வெளியிடவில்லை.

-அதேபோல், பன்னீர்செல்வம் அணி சார்பில்,  முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.பொன்னையன், நத்தம் விசுவநாதன், மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகிய 7 பேர் கொண்ட குழு பேச்சுக்களில் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.

நிபந்தனை இல்லை

பன்னீர்செல்வம் அணி சார்பில் விதிக்கப்பட்ட சில நிபந்தனைகள்  இணைப்புக் குறித்த பேச்சுக்கள் தொடங்கப்படாததற்கு காரணம் என்பதால் இந்த முறை பன்னீர்செல்வம் சற்று அடக்கியே வாசித்தார். இணைப்புக்கு ஏதேனும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளனவா? என்று பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது,‘‘பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நிபந்தனைகளைத் தெரிவிப்பது சரியாக இருக்காது. இரு அணிகள் இணைவது குறித்து விரைவில் நல்லது நடக்கும்’’ என்று கூறினார்.

மற்றொரு பக்கம் சசிகலா அணியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மக்களவைத் துணைத் தலைவருமான தம்பித்துரை சென்னையிலும்,  தில்லியிலும்  செய்தியாளர்களிடம் பேசும்போது, அதிமுக இணைப்பு முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். தம்பித்துரையின் இந்த முயற்சிக்கு காரணம், அதிமுக அணிகள் இணைந்தால் மத்திய அமைச்சரவையில் அவருக்கு இடம் கிடைக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது தான். இரு தரப்பும் பேசி முடிவு செய்தவாறு 24.04.2017 அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பேச்சுக்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பன்னீர் தரப்பு வீசிய அணுகுண்டு!

இணைப்பு முயற்சி வெற்றி பெற்றால் பட்டாசுகள் வெடிக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அன்று காலை பன்னீர்செல்வம் அணியிலிருந்து அணுகுண்டு வெடிக்கப்பட்டது. 24-ஆம் தேதி காலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம் அணியின் முக்கியத் தலைவர் கே.பி.முனுசாமி,‘‘இரு அணிகளும் பிளவுபட்ட நிலையில், எதிர் அணியில் பேச்சுக்குத் தயார் என்று கூறி குழு அமைத்துள்ளதாக அறிவித்தனர். அதை மதித்து நாங்களும் 7 பேர் கொண்ட குழுவை அமைத்தோம்.பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறியவர்கள், எங்களை அழைப்பார்கள் என்று நினைத்தோம். பேச்சுக்களில்தான் கோரிக்கைகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. கட்டுப்பாடில்லாத சூழ்நிலையில் சில தலைவர்கள் கருத்துகளைக் கூறினர். இதிலிருந்து அவர்களை வேறு யாரோ இயக்குவது தெரியவருகிறது.

இதனால் எங்களின் இரு கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டால் தான் பேச்சுக்களில் நாங்கள் பங்கேற்போம். 1.ஜெயலலிதா இயற்கையான முறையில் மரணமடையவில்லை. அவரின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. கழக தொண்டர்கள் அனைவரும் அவர் கொலை செய்யப்பட்டார் என்று ஆறாத்துயரம் அடைந்துள்ளனர். அதைப் போக்கவும், நீதியை நிலை நாட்டவும் சிபிஐ விசாரணை வேண்டும். அது குறித்து மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். 2. மாபெரும் இயக்கத்தைக் கபளீகரம் செய்துகொண்டிருக்கும் சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினரை முழுமையாகக் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளை மட்டுமே முன்வைத்துள்ளோம். இதைத் தவிர வேறு எந்த நிபந்தனையும் கிடையாது’’ என்று அறிவித்தார்.

சசிகலா அணியுடனான பேச்சுக்கு எந்த நிபந்தனையும் இல்லை என்று பன்னீர்செல்வம் ஏற்கனவே உறுதியளித்திருந்த நிலையில், முனுசாமியின் நிபந்தனை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பன்னீர்செல்வத்தின் இந்த முடிவுக்கு காரணம் இருந்தது. சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்காமல் ஒதுக்கி வைத்திருந்து, இரு அணிகளும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற்றவுடன் கட்சியை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர சசிகலா அணி நடத்தும் நாடகம் தான் இது என்று பன்னீர்செல்வம் அணி சந்தேகப்பட்டது தான் இதற்கு காரணமாகும்.

சசிகலா தரப்பு அழைப்பு

பன்னீர்செல்வம் அணியின் இந்த அதிரடி அதிமுக தரப்புக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ‘‘பன்னீர்செல்வம் அணியினர் ஆரம்பத்தில் இருந்தே பேச்சுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். காரண, காரியங்கள் தேடித் தேடி, பேச மறுக்கின்றனர். எந்தப் பிரச்சினையும் கூடிப் பேசி, விவாதித்தால் தீர்ந்துவிடும். நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும், எந்த நிபந்தனையும் இல்லாமல், உட்கார்ந்து பேசத் தயாராக உள்ளோம்.

இரு அணி இணைப்பு குறித்து கே.பி.முனுசாமிக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளோம்.ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டால், அரசாங்கம் அதை முன்னேற்று நடத்தும். சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் நியமனம் குறித்த வழக்கு, தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. ஆணையத்தின் தீர்ப்பின்படி, சசிகலா பதவி குறித்து முடிவெடுக்கப்படும்’’  என்று சசிகலா அணியின் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர் வைத்திலிங்கம் தெரிவித்தார். ஆனால், இந்த விளக்கத்தை பன்னீர்செல்வம் அணியினர் ஏற்க மறுத்து விட்டதால், அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வறட்சியில் கருகிய சம்பா பயிரைப் போன்று கருகிவிட்டன.

மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்க தடை: பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி!          ---அறிக்கை----      -மருத்துவர். இராமதாஸ

மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும்
திறக்க தடை: பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி!
                        ---அறிக்கை----
            -மருத்துவர். இராமதாஸ்

தமிழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை வகைமாற்றம் செய்து மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கும் தமிழக அரசின் முடிவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.  தமிழகத்தைச் சீரழிக்கும் மது வணிகத்திற்கு எதிராக  பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டு  வரும் தொடர் போராட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் கிடைத்த இரண்டாவது பெரிய வெற்றி இதுவாகும்.

மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் சாலை விபத்துக்களையும், உயிரிழப்புகளையும்  தடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தான் நெடுஞ்சாலையோர மதுக்கடைகளுக்கு எதிரான நீண்ட, நெடிய சட்டப்போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கியது. உச்சநீதிமன்றம் வரை சென்று 5 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்போராட்டம் நடத்தி இந்திய அளவில் 90 ஆயிரம் மதுக்கடைகளையும், தமிழகத்தில் 3321 மதுக்கடைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி மூடிய நிலையில், தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கும் முயற்சியில் எடப்பாடி அரசு ஈடுபட்டிருக்கிறது. இதற்கு வசதியாக தமிழ்நாடு முழுவதும் நகரப்பகுதிகளில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கியச் சாலைகள் மற்றும் இதர மாவட்ட சாலைகளை  மாநகராட்சி/ நகராட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து தீர்மானம் நிறைவேற்றி, அதை இன்றைக்குள் தமக்கு அனுப்பி வைக்கும்படி மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் கடந்த 21-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான செயல் என்பதால்  இந்த முடிவை கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது.

ஆனால், தமிழக அரசு அதன் முடிவில் உறுதியாக இருந்ததால் தான் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி இப்படி ஒரு தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சி பெற்றது. மதுக்கடைகளை மீண்டும் திறப்பதற்காக சாலைகள் வகைமாற்றம் செய்ய முயலவில்லை என்று தமிழக அரசு கூறினாலும் கூட அதன் உண்மை முகம் உயர்நீதிமன்றத்தில் அம்பலமாகிவிட்டது. ‘‘சாலைகளை வகைமாற்றம் செய்வதன் நோக்கம் மதுக் கடைகளை திறப்பது இல்லை என்றால், வகைமாற்றம் செய்யப்பட்ட பிறகு அவற்றில் மதுக்கடைகள் திறக்கப்படாது என்று உத்தரவாதம் அளிக்க முடியுமா?’’ என்று நீதிபதிகள் கேட்ட போது, அத்தகைய உத்தரவாதத்தை அளிக்க முடியாது என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் மறுத்து விட்டார். அதுமட்டுமின்றி, சாலைகள் வகைமாற்றம் செய்யப்பட்டால் மதுக்கடைகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக அரசு சாலைகளை வகைமாற்றம் செய்வதே மதுக்கடைகளை திறப்பதற்காகத் தான் என்பதை உயர்நீதிமன்றத்தில் அரசு மேற்கொண்ட இந்நிலைப்பாட்டிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

தேசிய நெடுஞ்சாலைகளை வகைமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதைக்கூட அறியாமல், அந்த சாலைகளையும் வகை மாற்றம் செய்ய வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவிட்டு, உயர்நீதிமன்றத்தில் தெரியாமல் தவறு செய்துவிட்டோம் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். மூடப்பட்ட மதுக்கடைகளை திறப்பதில் தமிழக அரசு எந்த அளவுக்கு அவசரம் காட்டியிருக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு ஆகும்.

மதுக்கடைகளை மூடும் விஷயத்தில் உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் தமிழக அரசு பலமுறை கண்டனங்களுக்கு ஆளாகியிருக்கிறது. ஆனாலும், தமிழக அரசு இன்று வரை திருந்தவில்லை. இப்போதும் கூட சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்வதற்குத் தான் துடித்துக் கொண்டிருக்கிறது. மூடப்பட்ட மதுக்கடைகளை அதே இடத்திலும், குடியிருப்புப் பகுதிகளிலும் திறப்பதற்கு எதிராக மக்கள் தொடர்போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு தமிழக அரசு இப்போதாவது திருந்த வேண்டும். மக்களைக் கொல்லும் மதுவை முற்றிலுமாக ஒழிக்க முன்வர வேண்டும். உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது. அதுமட்டுமின்றி, ஆகஸ்ட் 15&ஆம் தேதி விடுதலை நாள் முதல் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்.

மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், நாளை மறுநாள்  பா.ம.க. சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்படவிருந்த தொடர்முழக்கப் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.

தமிழ் பெண்களை அவதூறாக பேசிய கேரள அமைச்சர் மணியை கைது செய்க! ----அறிக்கை --- -மருத்துவர். இராமதாஸ்

தமிழ் பெண்களை அவதூறாக பேசிய
கேரள அமைச்சர் மணியை கைது செய்க!
                          ----அறிக்கை ---
       -மருத்துவர். இராமதாஸ்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தொழிலாளர் உரிமைகளுக்காக போராடிய தமிழ் பெண்களை கேரள மின்துறை அமைச்சர் எம்.எம். மணி மிகவும் அவதூறாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். பெண்மையை இழிவுபடுத்திய அவரை கேரள அரசு தண்டிக்காமல் பாதுகாப்பது வருத்தமளிக்கிறது.

இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் தமிழர்கள் குறிப்பாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றுகின்றனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2015&ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்திய பெண்கள், தங்களின் கோரிக்கைகளை வென்றெடுத்தனர். உரிமைகளுக்காக போராடிய பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெண்கள் ஒற்றுமை என்ற பெயரில் புதிய அமைப்பை ஏற்படுத்தி, தொழிலாளர்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 22-ஆம் தேதி இரவு மூணாறு அருகே அடிமாலி நகரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.எம்.மணி,‘‘ பெண்கள் ஒற்றுமை அமைப்பைச் சேர்ந்த பெண்கள் மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டவர்கள். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் இரவைக் கழிப்பவர்கள்’’ என்று பேசியிருக்கிறார். மணியின் இந்த பேச்சுக்கு  எதிராக இடுக்கி மாவட்டத்தில் மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்திவரும் போதிலும் அவர் மீது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நடவடிக்கை எடுக்கவில்லை; மாறாக அவருக்கு ஆதரவாக இருக்கிறார்.

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் வலிமையான மகளிர் அமைப்பை நடத்தி வருவதாக அந்தக் கட்சியின் தலைவர்கள் அடிக்கடி பெருமிதப்படுவார்கள். அப்படிப்பட்ட கட்சியின் தலைவர் ஒருவரே உரிமைக்காக போராடும் தமிழ் பெண்களின் நடத்தையைக் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். அதைக் கண்டிக்கவோ, அமைச்சர் மணி மீது நடவடிக்கை எடுக்கவோ மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை முன்வரவில்லை. உலகில் எங்கெங்கோ பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் மற்றும் அவதூறுகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் மகளிர் அமைப்பான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ் பெண்களுக்கு எதிரான இந்தக் கொடுமைக்கு எதிராக மட்டும் வாயை இறுகக் கட்டிக் கொண்டு மவுனம் கடைபிடிக்கிறது.

மார்க்சிஸ்ட் கட்சியின் அடிப்படைக் கொள்கைளில் ஒன்று தொழிலாளர் உரிமைக்காக குரல் எழுப்புவது ஆகும். அந்தப் பணியைத் தான் பெண்கள்  ஒற்றுமை அமைப்பினரும் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு உரிமைகளுக்காக போராடும் பெண்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் இழிவுபடுத்துவதையும், அதை அக்கட்சித் தலைமை ஆதரிப்பதையும் பார்க்கும் போது  தொழிலாளர் நலன் மற்றும் உரிமை, பெண்ணுரிமை குறித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழக்கங்கள் அனைத்தும் போலியானவை என்பது அம்பலமாகிறது. இதில் கொடுமை என்னவென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைச்சர் மணியால் விமர்சிக்கப்பட்ட பெண்கள் ஒற்றுமை அமைப்பின் தலைவர் கோமதி அகஸ்டின் கடந்த 2015&ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தான் இணைந்து செயல்பட்டு வந்தார். சில வாரங்களுக்கு முன் அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள் பிடிக்காமல், விலகிய நிலையில் அவரையும் அவரது சக நிர்வாகிகளையும் 71 வயது அமைச்சர் மணி அநாகரீகமாக விமர்சித்திருக்கிறார். பெண்கள் குறித்த மார்க்சிஸ்ட் கட்சியின் மதிப்பீடு இதுதான் போலிருக்கிறது.

பெண்களை மதிக்காத எந்த சமுதாயமும் முன்னேறியதாக வரலாறு இல்லை. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை உணரவேண்டும். தமிழ் பெண்களை இழிவுபடுத்தி பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மணியை கேரள முதலமைச்சர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் மணி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 354&ஆவது பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

தொடரும் ஊழல்கள்: வெளிப்படையான துணைவேந்தர் நியமன முறை தேவை! ---அறிக்கை --- -மருத்துவர். இராமதாஸ்

தொடரும் ஊழல்கள்: வெளிப்படையான
துணைவேந்தர் நியமன முறை தேவை!
---அறிக்கை ---
      -மருத்துவர். இராமதாஸ்

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் பெலிக்ஸ் நியமிக்கப் பட்டதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. தகுதியும், திறமையும் நிறைந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு, ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் என்பதால் குற்றச்சாற்றுக்கு உள்ளானவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றிய முனைவர் பாஸ்கரன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஓய்வுபெற்றார். அதன்பின் 5 மாதங்களாகியும் புதிய துணைவேந்தரை நியமிக்க அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் இருப்பதை பாட்டாளி மக்கள் கட்சி சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து மீன்வளப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் பெலிக்ஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். மீனவளப் பல்கலைக்கழகத்திற்கு ஓராண்டுக்குப் பிறகு துணைவேந்தர் நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. ஆனால், பல குற்றச்சாற்றுகளுக்கு உள்ளான ஒருவர் அப்பதவிக்கு வந்திருப்பது வருத்தமளிக்கிறது.

துணைவேந்தர் பதவிக்காக, பெலிக்ஸ் சார்பில் முதலமைச்சர் அலுவலகத்தில் செயலராக பணியாற்றி வரும் அதிகாரி மூலம் ரூ.3 கோடி கையூட்டு தரப்பட்டிருப்பதாக குற்றச்சாற்று எழுந்திருக்கிறது. புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பெலிக்ஸ் 2008-09ஆம் ஆண்டு மீன்வளக் கல்லூரியில் இணைப் பேராசிரியராக பணியாற்றிய போது, அவர் மேற்கொண்ட ஆய்வுத் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாற்று எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அவரது துறைத்தலைவர் பரிந்துரைத்திருந்தார். அக்குற்றச்சாற்றுகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு ஆட்சியாளர்களின் உதவியுடன் புகார்கள் குறித்த கோப்புகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, பொன்னேரியிலுள்ள அரசு மீன்வளக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் முதல்வராக பதவியேற்ற பிறகு அங்கு பணியாற்றிய ஆசிரியர்களிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொண்டது, பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் ஆராய்ச்சி மாணவி ஒருவர், மாதவரம் மீன்வள ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் ஓர் அலுவலக உதவியாளர் உட்பட பல பெண்களிடம் தவறாக நடது கொண்டது குறித்த குற்றச்சாற்றுகளும் நிலுவையில் உள்ளன. பல்கலைக்கழகம் என்பது கல்வியை மட்டுமின்றி ஒழுக்கத்தையும் கற்றுத்தரும் ஆலயம் ஆகும். அத்தகைய கல்விக்கோவிலுக்கு பாலியல் புகாரில் சிக்கிய ஒருவரை துணைவேந்தராக நியமிப்பது எந்த வகையில் சரியான நடவடிக்கை ஆகும்? என்பதை தமிழக ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் இத்தகைய அவலம் என்று கூற முடியாது. தமிழகத்தின் சிறிய பல்கலைக்கழகமான வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் தொடங்கி உலகப் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் வரை அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஊழலும், முறைகேடுகளும் பெருமளவில் தலைவிரித்தாடுகின்றன. துணைவேந்தர் பதவிகள் ரூ.10 கோடி முதல் ரூ.100 கோடி வரை விலை பேசி விற்பனை செய்யப்படுகின்றன. துணைவேந்தர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழுவை நியமிப்பதிலேயே ஊழல் தொடங்கிவிடுகிறது. துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக குழுவின் தலைவராகவும், உறுப்பினர்களாகவும் கல்லூரிகளின் முதல்வர்கள், குறிப்பாக தனியார் கல்லூரி முதல்வர்கள் நியமிக்கப்படுகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளை நிர்வகிக்கும் பல்கலை.களின் துணைவேந்தர்களை கல்லூரி முதல்வர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்க முடியும்? தனியார் கல்லூரி முதல்வர்கள் தங்கள் நிர்வாகத்திற்கு வளைந்து கொடுக்கும் ஒருவரை துணைவேந்தராக தேர்ந்தெடுக்கின்றனர். துணைவேந்தர் வளைந்து கொடுக்கும் போது ஊழல்கள் பெருக்கெடுக்கின்றன.

தமிழகத்தில் துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்க வெளிப்படையான நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். தலைசிறந்த கல்வியாளர்கள் மட்டுமே தேர்வுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும். துணைவேந்தர் பதவிக்கு குறைந்தபட்ச பணி அனுபவம், வயது, முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டிய அனுபவம், எழுதி வெளியிட்ட நூல்கள் ஆகியவை குறித்த தகுதிகள் தெளிவாக நிர்ணயிக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் துணைவேந்தர் பதவிக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்களையும், அவர்களில் இருந்து துணைவேந்தர் பதவிக்கு பரிசீலிப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட பெயர்களையும் தேர்வுக்குழு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். கடைசியாக ஆளுனருக்கு பரிந்துரைக்கப்படும் 3 பேரின் விவரங்களும், அவர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதை மக்கள் ஆய்வுக்காக தேர்வுக்குழு தெரிவிக்க வேண்டும். அவர்களிலிருந்து ஒருவரை துணைவேந்தராக நியமிக்கும் போது அவருக்குள்ள சிறப்புத் தகுதிகள் என்ன? என்பதை ஆளுனர் அலுவலகம் விளக்க வேண்டும். அப்போது தான் துணைவேந்தர் நியமனத்தில் ஊழலை ஒழிக்க முடியும்.

எனவே, துணைவேந்தர்கள் நியமனத்திற்கான புதிய நடைமுறையை தமிழக அரசு உருவாக்கி வெளியிட வேண்டும். அதனடிப்படையில் புதிய துணைவேந்தர்களை தமிழக அரசும், ஆளுனரும் நியமிக்க வேண்டும்.