Monday, 6 March 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!ஆர்.எம்.வீயால் ஜெயலலிதா பெற்ற வாழ்வு -மருத்துவர். இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!

ஆர்.எம்.வீயால் ஜெயலலிதா பெற்ற வாழ்வு
         -மருத்துவர். இராமதாஸ்
சில உண்மைகளை அரிச்சந்திரனே வந்து சொன்னாலும் நம்புவதற்கு கடினமாக இருக்கும். அப்படிப்பட்ட  உண்மைகளில் ஒன்று தான் ஜெயலலிதாவின் அரசியல் வருகையும், அதற்கு யார்  காரணம் என்பதும் ஆகும். எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த போது அதிமுகவில் தீவிரமாக செயல்பட்ட இரு அணிகளின் தலைவர்கள் யார்? என்று கேட்டால் ஆர்.எம்.வீரப்பனும், ஜெயலலிதாவும் தான் என்று குழந்தைகள் கூட தெளிவாகக் கூறிவிடும்.

அந்த அளவுக்கு இருவருக்குமான மோதல் பிரபலமானது. ஆனால், ஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்கு ஆர்.எம்.வீரப்பன் தான் முக்கிய காரணம் என்பது பெரும்பாலான மக்களுக்கு தெரியாது. ஆனால், அது தான் உண்மை.

அடிமைப்பெண் திரைப்படத்தில் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த முக்கியத்துவத்தையும், அதன்பின்  எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் கதாநாயகி பாத்திரம் ஜெயலலிதாவுக்கே ஒதுக்கப்பட்டதையும் எம்.ஜி.ஆரின் குடும்பத்தினர் விரும்பவில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொறுப்பு எம்.ஜி.ஆரின் திரைப்பட நிறுவன நிர்வாக பொறுப்பாளராக இருந்தவரும், சத்யா மூவீஸ் உரிமையாளருமான ஆர்.எம்.வீரப்பனிடம் வழங்கப்பட்டது. அவரும் இதுதொடர்பாக எம்.ஜி.ஆரிடம் வெளிப்படையாகவே பேசினார்.

ஜெயலலிதாவை தடுத்த ஆர்.எம்.வீரப்பன்
‘‘உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் என்றைக்கும், எக்காரணத்தைக் கொண்டு நான் குறுக்கிடவில்லை. இப்போது வந்திருகிற விரும்பத்தகாத சூழ்நிலையில் ஜெயலலிதா அவர்களைப் படப்பிடிப்புக்காகத் தான் அழைத்துச் செல்கிறீர்கள் என்றே வாதிட்டாலும், சமீப காலமாக அதற்கு வேறு அர்த்தம் ஏற்படுகின்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறியதாக ஆர்.எம்.வீரப்பன் பின்னாளில் பதிவு செய்திருக்கிறார்.

ஆர்.எம்.வீரப்பன் இவ்வாறு கூறியதற்கு முழுமையாக இல்லாவிட்டாலும், ஓரளவு பயன்கிடைத்தது. அது என்ன? என்பதையும் ஆர்.எம்.வீரப்பன் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

‘‘ எம்.ஜி.ஆரிடம் நான் பேசிய பிறகு, ஜெயலலிதாவை ஜப்பானுக்கு ழைத்துச் செல்வதில்லை என்பது மட்டுமல்ல, உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அவரை நடிக்க வைப்பதில்லை என்றும் எம்.ஜி.ஆர் முடிவெடுத்து விட்டார் என்று எனக்கு தெரியவந்தது. ஜப்பானின் ஒசாகா நகரில் எக்ஸ்போ&70 பொருட்காட்சியில்  நாங்கள் ஒருபக்கத்தில் பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்த போது, ஜெயலலிதா அங்கு வந்திருக்கிறார் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. அவர் வந்தது உண்மை என்று தெரிந்தது. என்னைப் பொறுத்தவரை எம்.ஜிஆரிடம் வாதாடி அவரை உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிக்காமல் தடுக்க மட்டுமே என்னால் முடிந்தது’’ என்று ஆர்.எம்.வீரப்பன் கூறினார். அதன்பின்னர் சில படங்களில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தாலும், ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையிலான உறவு முறிந்து விட்டது.

ஆர்.எம்.வீரப்பன் பாராட்டு

அப்படிப்பட்ட சூழலில் தான் 1980&ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்ததும், செய்தித்துறை அமைச்சராக பதவியேற்ற ஆர்.எம்.வீரப்பன் சென்னை இராணி சீதை அரங்கில் நடைபெற்ற பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவும் கலந்து கொண்டிருந்தார். விழாவில் பேசிய ஆர்.எம்.வீரப்பன்,‘‘ சகோதரி ஜெயலலிதா சிறந்த நாட்டியக் கலைஞர். அவரைப்போன்றவர்கள் கூட இதை விட்டுவிடாமல் இக்கலையை வளர்ப்பதற்கு பாடுபட வேண்டும்’’ என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆர்.எம்.வீரப்பனின் இந்த பேச்சு பற்றிய விவரங்கள் எம்.ஜி.ஆரிடம் தெரிவிக்கப்பட்டன.அந்த நேரத்தில் 1981 ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை மதுரையில் மூன்றாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவை வாழ்த்தி ஆர்.எம்.வீரப்பன் பேசியதை அறிந்து அவரை அழைத்த எம்.ஜி.ஆர்,‘‘ உலகத் தமிழ் மாநாட்டில்  ஜெயலலிதாவின் காவிரி தந்த கலைச்செல்வி நாட்டிய நாடகத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்’’ என்று ஆணையிட்டார். திமுகவிலிருந்து நீக்கப்படுவதற்கு முன் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில், ஜெயலலிதா நாடகம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையை  கலைஞர் நிராகரித்து விட்டதால் காயமடைந்திருந்த எம்.ஜி.ஆர், தமது ஆட்சியில்  தமது கைகளாலேயே ஜெயலலிதாவுக்கு நாட்டிய நாடகம் நடத்தும் வாய்ப்பை வழங்கி மகிழ்ந்தார்.

அதிமுகவில் ஜெயலலிதா

மதுரை உலகத்தமிழ் மாநாட்டில் எம்.ஜி.ஆர் முன்னிலையில் ஜெயலலிதா நடத்திய ‘நாடகம்’ இருவருக்குமான இடைவெளியை குறைத்தது. அதன்பயனாக,1982 ஜூனில் அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் ஜெயலலிதா. பிறகு ஜூலையில் தான் கொண்டுவந்த சத்துணவு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு கவர்ச்சியான முகம் தேவைப்பட்டது எம்.ஜி.ஆருக்கு. அப்போது அவரின் நினைவிற்கு வந்தவர் ஜெயலலிதா. மேடைக்கு மேடை சத்துணவு திட்டத்தையே பேசி அத்திட்டத்திற்கு புகழ் சேர்த்ததோடு மட்டுமல்லாமல்  அந்த திட்டத்திற்கு நன்கொடையாக ரூபாய் 40,000 வழங்கினார் ஜெயலலிதா.

அதன்பின்னர் ஜெயலலிதாவுக்கு அரசியலிலும், அதிமுகவிலும் ஏறுமுகம் தான். சத்துணவு திட்ட உயர்மட்டக்குழுவில் ஜெயலலிதாவை உறுப்பினராக்கிய எம்.ஜி.ஆர். அதன்பின்1983-இல் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தார். எம்.ஜி.ஆருக்கு இணையான சினிமாக் கவர்ச்சி ஜெயலலிதாவுக்கு இருந்ததால், தொண்டர்களும், லோக்கல் நிர்வாகிகளும். எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியான மரியாதையை தொண்டர்கள் அவருக்கு வழங்கினர்.

ஜெயலலிதாவின்  பேச்சுத்திறமையையும், அபாரமான ஆங்கில, இந்தி புலமையையும் கவனித்த எம்.ஜி.ஆர். அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கினார். மேலும், மாநிலங்களவை அ.தி.மு.க., துணைத் தலைவராகவும் நியமித்தார். அங்கு இவர் பேசிய பேச்சுக்கள் பிரதமர் இந்திராவிடமும் பாராட்டை பெற்றது.

மூத்த தலைவர்கள் குமுறல்

மற்றொருபுறம், கட்சியில் எத்தனையோ மூத்த தலைவர்கள்  இருக்கும்போது ஜெயலலிதாவுக்கு  அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர். என்ற புகைச்சலும் கிளம்பியது. நேரடியாகவே எம்.ஜி.ஆரை குற்றம் சாட்டினார் வருவாய்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம். அதனால் கோபமுற்ற எம்.ஜி.ஆர்., எஸ்.டி.எஸ்.,வசமிருந்த முக்கியத்துறைகளை பறித்துக்கொண்டு உணவுத்துறையை கொடுத்து அவரது மதிப்பைக் குறைத்தார். அவரின் ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டது.

இதற்கெல்லாம் காரணம் ஜெயலலிதா தான் என்று நினைத்து கடுப்பான எஸ்.டி.எஸ்., கட்சியையும், ஆட்சியையும் குறை சொன்னார். இதனால் மேலும் கோபமான எம்.ஜி.ஆர்., எஸ்.டி.சோமசுந்தரத்தை அமைச்சரவையிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கினார். இதைத்தொடர்ந்து நமது கழகம் என்ற பெயரில் தனிக்கட்சித் தொடங்கி 1984-ஆம் ஆண்டு தேர்தலில் எஸ்.டி. சோமசுந்தரம் போட்டியிட்டதும், அதில் படுதோல்வியடைந்து மீண்டும் அதிமுகவில் இணைந்ததும் வரலாறு. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் அடிமைப் போல மாறி, தமது வயதையும் பொருட்படுத்தாமல் ஜெயலலிதாவின் மகிழுந்தில்  பாதுகாவலரைப் போல தொங்கிக் கொண்டு சென்றது கேலி வரலாறு. ஒருகட்டத்தில் அதிமுகவிலிருந்து ஜெயலலிதால் நீக்கப்பட்ட எஸ்.டி.சோமசுந்தரம் மீண்டும் தீவிர அரசியலுக்கு வராமலேயே மறைந்தார்.

                                              

வங்கிகளின் சட்டவிரோத அபராத வசூலுக்கு முடிவு கட்ட வேண்டும்! மருத்துவர். அன்புமணி இராமதாஸ் கருத்து

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகரப் பகுதிகளில் மாதாந்திர சராசரி இருப்புத் தொகை ரூ.5000 என்ற அளவில் இருக்க வேண்டும்; இது குறைந்தால்  அதிகபட்சமாக ரூ.100 வரை அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.

வங்கிகளின் சட்டவிரோத அபராத
வசூலுக்கு முடிவு கட்ட வேண்டும்!

பாரத ஸ்டேட் வங்கியும், சில தனியார் வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு சில சாத்தியமில்லாத நிபந்தனைகளை விதித்து, அதை நிறைவேற்றாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளன. அவை அறிவித்துள்ள அபராதம் அதிகமாகும்.

வணிக நெறிகளுக்கு எதிரான இச்செயல் கண்டிக்கத்தக்கது.

மாதத்திற்கு 3 முறை மட்டும் தான் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்றும், அதற்கு மேல் ஒவ்வொரு முறை பணம் செலுத்தும் போதும் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.50 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. நடப்புக் கணக்கு வைத்திருப்போர் மாதம்  3 முறைக்கு மேல் பணம் செலுத்தினால் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

ஏ.டி.எம். சேவையை கூடுதலாக பயன்படுத்தினால் அதற்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.
மற்றொருபுறம், ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் ஆகிய வங்கிகளின் கணக்குகளில் மாதம் 4 முறை மட்டுமே பணம் கட்டலாம் என்றும், அதற்கு மேல் ஒவ்வொரு முறை பணம் செலுத்தும் போதும் ரூ.150 தண்டம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டில் மின்னணு பணப்பரிமாற்ற முறையை அதிகரிக்கும் நோக்குடன் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படும் போதிலும், அவை முழுமையான உண்மை அல்ல. மாறாக வங்கிகளின் லாபம் குறைந்து, வாராக்கடன்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவற்றில் எது காரணமாக இருந்தாலும் பொது மக்களையும், வணிகர்களையும் கடுமையாக பாதிக்கும் இந்நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

வங்கிக்கணக்கில் மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறைக்கு மேல் பணம் செலுத்துவதோ, எடுப்பதோ கூடாது என்பது எப்படி சாத்தியமாகும் என்பதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் சிந்தித்து பார்க்க வேண்டும். நடப்புக் கணக்கு வைத்திருக்கும் வணிகர்கள் முந்தைய நாள் வணிகம் மூலம் சேர்ந்த பணத்தை அடுத்த நாள் வங்கியில் செலுத்துவார்கள்.
இவ்வாறு ஒவ்வொரு வேலை நாளிலும்  அவர்கள் வங்கியில் பணம் செலுத்துவது தவிர்க்க முடியாதது. வணிகம் மூலம் சேர்ந்த பணத்தை சேமித்து வைத்து 10 நாட்களுக்கு ஒருமுறை செலுத்துவதோ, பணத்தையே கையாளத் தேவையில்லை எனும் அளவுக்கு மின்னணு பணப்பரிமாற்ற முறையில் வணிகம் செய்வதோ நடைமுறை சாத்தியமில்லை.

ஒருவேளை தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்களின் மூலம் பணத்தை செலுத்தலாம் அல்லது எடுக்கலாம் என்றால், அதிலும் மாதத்திற்கு 5 பரிமாற்றங்களுக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை. இத்தகைய சூழலில் பாரத ஸ்டேட் வங்கியும், மற்ற தனியார் வங்கிகளும் அறிவித்துள்ள அபராதம் வாடிக்கையாளர்களின் பணத்தை சுரண்டும் செயலாகவே பார்க்கப்படும்.

வங்கிகளின் இலாபத்தை அதிகரிக்க வேண்டும் என்றால், நிர்வாகச் செலவுகளை குறைத்தல், வாரக்கடன்களை வசூலித்தல் ஆகியவற்றின் மூலமே சாதிக்க வேண்டும். மாறாக அப்பாவி வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை சுரண்டி இலாபத்தை அதிகரிக்க நினைப்பது மக்களை முட்டாள்களாக்கும் கேலிக்கூத்தான செயலாகும்.

ஒருவேளை மின்னணு பணப்பரிமாற்ற முறையை ஊக்குவிப்பது தான் இதன் நோக்கம் என்றால், குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கி, மின்னணு பணப்பரிமாற்ற முறைக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். மேலும் ஊக்கப்பரிசுகளை வழங்குவதன் மூலமே மின்னணு பணப்பரிமாற்றத்திற்கு மக்களை அழைத்து வரமுடியுமே தவிர, அபராதம் விதித்து சாதிக்க முடியாது. நீந்தத் தெரியாதவர்களை வெள்ளத்தில் தள்ளிவிட்டு நீச்சல் கற்றுக்கொடுக்கும் அணுகுமுறைக்கும், இந்த அணுகுமுறைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதனால், பாதிப்புகள்தான் ஏற்படுமே தவிர, பயன் எதுவும் கிடைக்காது.

இவற்றுக்கெல்லாம் மேலாக, வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு சேவை செய்யவேண்டியது வங்கிகளின் கடமையாகும். சேமிப்பு கணக்கில் உள்ள தொகைக்கு அதிகபட்சமாக 4% மட்டுமே வட்டி வழங்கப்படுகிறது. நடப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி வழங்கப்படுவதில்லை. இந்தப் பணத்தைதான் வங்கிகள் அதிகபட்சமாக 15% வரை வட்டிக்குக் கொடுத்து இலாபம் ஈட்டுகின்றன. வங்கிகளின் மூலதனத்தைவிட சேமிப்புக்கணக்கு மற்றும் நடப்புக்கணக்கில் உள்ள தொகை பலமடங்கு அதிகமாகும். வங்கிகள் இலாபம் ஈட்ட அடிப்படைக் காரணமாக விளங்கும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதை விட்டுவிட்டு அபராதம் விதித்து தண்டிப்பது நல்ல அணுகுமுறை அல்ல.

அனைத்துப் பரிமாற்றங்களும் வங்கிகள் மூலம் தான் மேற்கொள்ளப்படவேண்டும்; அரசு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வங்கிகள் மூலம் தான் வழங்கப்படும் என்று கூறி, மக்களைக் கட்டாயப்படுத்தி வங்கிக் கணக்குத் தொடங்க வைத்த மத்திய அரசு, இப்போது அவர்களுக்கு குறைந்தபட்ச சேவை வழங்குவதற்குக்கூட அபராதம் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது நம்பிக்கை துரோகம் ஆகும். மக்களையும், வணிகர்களையும் மிகக் கடுமையாக பாதிக்கும் அபராதத்தை ரத்து செய்து, ஏற்கெனவே இருந்த நடைமுறையைத் தொடரும்படி வங்கிகளுக்கு மத்திய அரசு ஆணையிடவேண்டும்.

- மருத்துவர். அன்புமணி இராமதாஸ்
#Anbumani #Ramadoss #PMK

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை: மசோதாவை உடனே நிறைவேற்றுக! -மருத்துவர். இராமதாஸ்-----அறிக்கை----

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு
சிறை: மசோதாவை உடனே நிறைவேற்றுக!
                            -அறிக்கை-
     -மருத்துவர். இராமதாஸ்
சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கொடுப்பதையும், வாங்குவதையும் பிடியாணையின்றி கைது செய்யக்கூடிய குற்றமாக (Cognizable Offence) அறிவிக்கவும்,  இதற்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் வசதியாக சட்டத்திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கதாகும்.

இந்தியாவில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் கருவியாக திகழ்வது தேர்தல்கள் தான். ஆனால், தேர்தல் களம் வாக்குகளை விலை கொடுத்து வாங்கும் சந்தையாக மாறியிருப்பது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்கும் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டும் வகையில் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படி பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இருமுறை சந்தித்து பேசினார். அதையேற்று மொத்தம் 47 வகையான தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஆணையம் முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் ஜைதி உறுதியளித்திருந்தார்.

அதன்படி தேர்தல் ஆணையம் அனுப்பிய பரிந்துரைகளில் ஒன்றை ஏற்று தான் வாக்குக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் புலப்படக் கூடிய குற்றமாக அறிவிப்பதற்கான சட்டத்திருத்த முன்வரைவு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்திருத்த முன்வரைவு மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 29 மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஒப்புதல் அளித்த பிறகு இம்மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் முழுமையாக இல்லாவிட்டாலும் கூட, ஓரளவாவது கட்டுப்படுத்தப்படும். எனவே, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்கான குற்றவியல் சட்டத் திருத்த மசோதாவை வரும் 9&ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டத்தில் தாக்கல் செய்து உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் ஓட்டுக்கு பணம் தருவதை தடுக்க வேண்டியது முக்கியமான ஒன்றே தவிர, அதன் மூலமாக மட்டும் ஜனநாயகத்தை  பாதுகாக்கவோ, தேர்தல் முறைகேடுகளை தடுக்கவோ முடியாது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் வாரி இறைக்கப்பட்டது; இதுதொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இரு தொகுதிகளின் தேர்தல்களும் ஒத்திவைக்கப் பட்டன. ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்கள் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்டன. அப்போதும் அதிமுகவும், திமுகவும் பணத்தை வாரி இறைத்தன. ஆனால், அதைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. பொதுத்தேர்தலின் போது ஒத்திவைக்கப்பட்டதைப் போல இப்போது இடைத்தேர்தலை ஒத்திவைக்காதது ஏன்? என்று கேட்டபோது, அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என ஆணையம்  கூறிவிட்டது. பொதுத்தேர்தலில் போது அரசியல் சட்டத்தின் 324&ஆவது பிரிவை பயன்படுத்தி  தேர்தலை ஒத்திவைத்தோம்; எல்லா நேரத்திலும் அப்பிரிவை பயன்படுத்த முடியாது என ஆணையம் கூறிவிட்டது.

-தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டால், உடனடியாக தேர்தல் ஒத்திவைக்கப்படும்  என்ற நிலை இருந்தால் வாக்காளர்களுக்கு பணம் தர அரசியல் கட்சிகள் அச்சப்படும். இதற்கேற்ற வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, தேர்தல் அதிகாரிகளாக வெளிமாநில அதிகாரிகளை நியமிப்பது, தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்ட பிறகு கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிப்பது, தேர்தலுக்கு 6 மாதங்கள் முன்பிலிருந்தே ஊடகங்களில் அரசு விளம்பரங்களை வெளியிட தடை விதித்தல் உள்ளிட்ட சீர்திருத்தங்களையும்,  தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள 47 சீர்திருத்தங்களையும் நடைமுறைப்படுத்துவதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும்.

இந்திய ஜனநாயகத்தை தேர்தல் ஊழல் என்ற புற்றுநோய் வேகமாக அரித்து வரும் நிலையில், அதை தடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். எனவே, இனியும் தாமதிக்காமல் தேர்தல் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கான சட்டத்திருத்தங்களை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

Sunday, 5 March 2017

பெட்ரோல், டீசல் மீதான வாட் உயர்வு பகல் கொள்ளையை விட பயங்கரமானது! மருத்துவர். இராமதாஸ் ----அறிக்கை---

பெட்ரோல், டீசல் மீதான வாட் உயர்வு
பகல் கொள்ளையை விட பயங்கரமானது!
                      ----அறிக்கை---
        -மருத்துவர். இராமதாஸ்
தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான வாட் எனப்படும் மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மீதான வாட் வரி 27 விழுக்காட்டில் இருந்து 34% ஆக உயர்த்தப்பட்டிருப்பதால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.78 உயர்ந்து ரூ.74.39 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி 21.43 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக உயர்த்தப் பட்டிருப்பதால், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.76 அதிகரித்து ரூ.62.49 ஆக உள்ளது. எந்த தேவையுமின்றி பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இன்னும் இரு வாரங்களில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், வரி மாற்றம் குறித்த அறிவிப்புகளை அதில் வெளியிட்டிருக்கலாம். ஆனால், புதிய வரிகள் இல்லாத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே வரிகளை உயர்த்துவது மிகப்பெரிய மோசடியாகும். 2011-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக ரூ.20,000 கோடிக்கு வரிகளை உயர்த்தி விட்டு, நிதிநிலை அறிக்கையில் வரிகளை உயர்த்தவே இல்லை என்று தனக்குத்தானே பெருமிதப்பட்டுக் கொண்டார். அவரது வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமியிடமிருந்து இத்தகைய மோசடிகளே மட்டுமே எதிர்பார்க்க முடியும்.

மத்திய, மாநில அரசுகள் வாக்குவங்கி அரசியலுக்காக தேவையற்ற திட்டங்களை செயல்படுத்தி மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கின்றன; ஊழல்கள் செய்து மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கின்றன. இதனால் ஏற்படும் இழப்பை ஈடு செய்வதற்காக பெட்ரோல், டீசல் மீது வரிகளை சுமத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. இது மிக மிக மோசமான பொருளாதார அணுகுமுறையாகும். உதாரணமாக, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.39-க்கு விற்கப்படும் நிலையில், அதன் உற்பத்திச் செலவு ரூ.28.73 மட்டும் தான். அதன்மீது மத்திய அரசு கலால் வரியாக ரூ.21.48 வசூல் செய்கிறது. தமிழக அரசு லிட்டருக்கு ரூ.18 வரியாக வசூலிக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் கமிஷனாக ரூ.5.41 வழங்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.28.73 எனும் போது அதன்மீது வரி மற்றும் கமிஷனாக ரூ.45.66, அதாவது 161% வசூலிக்கப்படுகிறது என்பதிலிருந்தே மக்களை மத்திய அரசும், மாநில அரசும் எந்த அளவுக்கு சுரண்டுகின்றன என்பதை உணர முடியும்.

அதேபோல், ஒரு லிட்டர் டீசலின் அடக்கவிலை ரூ.29.17 மட்டுமே. அதன்மீது வரிகள் மற்றும் கமிசனாக ரூ.33.32 நுகர்வோரிடமிருந்து பறிக்கப்படுகிறது. மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத பெட்ரோல், டீசல் மீது இவ்வளவு வரியை வசூலிப்பது பகல் கொள்ளையை விட பயங்கரமானது ஆகும். தமிழக அரசின் நிதிநிலைமை மிகவும் மோசமாக இருப்பது உண்மை தான். அதை சரி செய்ய அரசின் வருவாயை பெருக்க வேண்டும் என்பதும் சரியானது தான். ஆனால், அதற்கு ஆயிரமாயிரம் வழிகள் இருக்கும் போது, அவற்றை விடுத்து நேரடியாக மக்களை பாதிப்பும் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உயர்த்துவது ஏற்கமுடியாதது ஆகும். உதாரணமாக, தமிழகத்தில் தனியார் முகவர்கள் மூலம் நடைபெறும் மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தினால் ஆண்டுக்கு ரூ.35,000 கோடி கூடுதல் வருமானம்  கிடைக்கும். அதை செய்யாமல் ரூ.1500 கோடி கூடுதல் வருவாய் ஈட்டுவதற்காக அனவரையும் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துவது எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதது ஆகும்.

பெட்ரோல் மீதான வாட் வரி 34% ஆக உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் மராட்டியத்துக்கு அடுத்தபடியாக அதிக வாட் வரி வசூலிக்கும் மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் பெற்றிருக்கிறது. கடந்த காலங்களில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தும் போதெல்லாம் ஜெயலலிதா கண்டனம் தெரிவிப்பார். அப்போது,‘‘மிக  அதிக  அளவில்  தற்போது  பெட்ரோல்  மற்றும்  டீசல்  விலைகள் உயர்த்தப்பட்டதன் காரணமாக சரக்கு கட்டணங்கள் அதிகரிக்கும். அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்.  அதிகரித்து வரும் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும்.  ஏழை,  எளிய மக்களின் வாழ்க்கைத் தரம்  பாதிப்படையும்’’ என்று ஜெயலலிதா கூறுவது வாடிக்கை. இப்போது தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்படுவார்களா... இல்லையா? என்பதை முதலமைச்சர் பழனிச்சாமி விளக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டிருப்பதால் ஏழை, எளிய மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு வரி உயர்வை  அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.