Sunday, 5 March 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!    ஆட்சிக்கலைப்பும் அனுதாப வெற்றியும்! -மருத்துவர். இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
   ஆட்சிக்கலைப்பும் அனுதாப வெற்றியும்!
   -மருத்துவர். இராமதாஸ்

1980ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து வந்த 6 மாதங்கள் எம்.ஜி.ஆருக்கு கடுமையான சோதனைக்காலமாக அமைந்தது. மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசு பதவி விலகவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சி.சுப்ரமணியம், “எம்.ஜி.ஆர். இடத்தில் நான் இருந்திருந்தால் இந்நேரம் பதவி விலகியிருப்பேன்” என்று கூறினார்.

எம்.ஜி.ஆர். பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதை தி.மு.க. தலைவர் கலைஞரிடம் சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர்கள், நீங்களும் எம்.ஜி.ஆரை பதவி விலகும்படி வலியுறுத்துவீர்களா? என்று கேட்டனர். அதற்கு அவருக்கே உரிய வார்த்தை ஜாலத்துடன் கலைஞர் பதிலளித்தார்.

மானமிருந்தால்....

“ராஜினாமா செய்யுங்கள் என்று நான் அவர்களை வலியுறுத்தப் போவதில்லை. இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தங்கள் மானப் பிரச்சனை என்று அவர்கள்தான் சுவரொட்டிகள் எல்லாம் ஒட்டினார்கள். எனவே, முடிவை அவர்களுக்கே விட்டுவிடுகிறேன்” என்பதுதான் கலைஞர் சொன்ன பதிலாகும்.
தேர்தல் தோல்வி மூலம் பாடம் கற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர்., தமது தவறுகளை திருத்திக்கொள்ள விரும்பினார். இதுதொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தை ராணுவத்தை வரவழைத்தும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் முறியடித்தது. அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தபோது, அதை நிறைவேற்றித் தராமல் அவர்களுக்கு எதிராக பொதுமக்களைத் தூண்டியது, மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் அளவுக்கு அதிகமான கெடுபிடிகளைக் காட்டியது ஆகியவை தேர்தல் தோல்விக்கான காரணங்களாக இருக்கலாம் என்று எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்பட்டது.

பொருளாதார இடஒதுக்கீடு ரத்து

இவற்றையெல்லாம்விட, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று எம்.ஜி.ஆர் அறிவித்தது மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்ததாகவும், அதுதான் தோல்விக்கான முதல் காரணம் என்றும், அ.தி.மு.க. மூத்தத் தலைவர்கள் எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தேர்தல் முடிந்த இரு வாரங்களுக்குள் அதாவது 20.01.1980 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டிய எம்.ஜி.ஆர். அதில் விவாதிக்கப்பட்ட அம்சங்களின் அடிப்படையில், 24.01.1980 அன்று இரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் முதலாவதாக பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற  அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டது. இரண்டாவதாக தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் அளவு 68 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 31 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.

அதேபோல், மதுவிலக்கு விஷயத்தில் காட்டிய கெடுபிடிகளையும் எம்.ஜி.ஆர். தளர்த்தினார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு நல்லாட்சி வழங்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் திட்டம். ஆனால், அதை காங்கிரசும், தி.மு.க.வும் அனுமதிக்கவில்லை. 1977இல் மத்தியில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது, காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. அதற்கு பழிதீர்க்கும் வகையில் 1980ஆம் ஆண்டு மத்தியில் பொறுப்பேற்ற இந்திரா காந்தி அரசு, ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களின் அரசுகளை கலைக்க முடிவு செய்தது. இதையறிந்த எம்.ஜி.ஆர்., தமது அமைச்சரவை சகாக்களுடன் தில்லி சென்று இந்திரா காந்தியைச் சந்திக்கவும் ஆட்சிக் கலைப்பை தவிர்க்கவும்முயன்றார்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்கலைப்பு

ஆனால், எம்.ஜி.ஆரால் இந்திரா காந்தியையும் சந்திக்க முடியவில்லை, ஆட்சிக் கலைப்பையும் தடுக்க முடியவில்லை. 17.02.1980 அன்று பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டவாறு 9 மாநிலங்களின் அரசுகள் கலைக்கப்பட்டன. அவற்றில் தமிழக அரசும் ஒன்று.
ஆட்சிக் கலைப்பை எதிர்பார்த்திருந்த எம்ஜிஆர்., தமது வருத்தத்தை பெரிய அளவில் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. தமது வீட்டில் இருந்த இனிப்புகளை நண்பர்களுக்குக் கொடுத்து, தாம் மகிழ்ச்சியாக இருப்பதைப்போல காட்டிக்கொண்டார். ஆனால், அடுத்த சில வாரங்களில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டபோதுதான் எம்ஜிஆர் அதிர்ச்சியடைந்தார். மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்த எம்ஜிஆரிடம் எட்டப்பேரவை தேர்தலைச் சந்திக்க பணம் இல்லை. பணத்திற்கு என்ன செய்வது? என்பது தெரியாமல் எம்ஜிஆர் தடுமாறிக்கொண்டிருந்தார்.

கை கொடுத்த மலையாள தொழிலதிபர்கள்

சாதி, மத, இன வேறுபாடு எதுவும் தங்களுக்குக் கிடையாது என்று திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் மீண்டும் மீண்டும் கூறிவந்தாலும், இனம் இனத்தைக் காக்கும் என்பதுதான் திராவிடத் தலைவர்களின் கொள்கை என்பது எம்ஜிஆர் விஷயத்தில் உண்மையானது. தேர்தல் செலவுகளுக்காக பணத்தை திரட்டவேண்டும் என்ற நினைத்த எம்ஜி,ஆர். உடனடியாக மலையாள தொழிலதிபர்களின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவரும், புகழ்பெற்ற தொழிலதிபருமான வேலாயுதம் நாயர், எம்ஜிஆருக்கு நிதி திரட்டித்தர ஒப்புக்கொண்டார். எம்.ஆர்.எஃப். நிறுவன அதிபர் உட்பட தமிழகத்தில் வாழும் மலையாள தொழிலதிபர்கள் கணிசமான தொகையைத் திரட்டி எம்ஜிஆரின் தேர்தல் செலவுக்காக வழங்கினர்.
பணம் கிடைத்ததால் ஏற்பட்ட உற்சாகத்தில் குமரி அனந்தனின் காந்தி காமராஜ், தேசிய காங்கிரஸ், பழநெடுமாறனின் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகியவை எம்.ஜி.ஆர். தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்தனர்.

எம்.ஜி.ஆரின் கண்ணீர்; பெண்களின் ஆதரவு

திரைப்படங்களில் நடிக்கும்போதே பெண்களின் மனதைக் கவரும் வித்தையைக் கற்று வைத்திருந்த எம்ஜிஆர், 1980ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிபெறுவதற்குக் கண்ணீர்தான் சிறந்த ஆயுதம் என்று தீர்மானித்தார். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அதை அவர் முழுமையாகச் செயல்படுத்தினார்.
மேடைக்கு மேடை தமது ஆட்சி கலைக்கப்பட்டதற்கு காரணமானவர்களை மக்கள்தான் தண்டிக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர் கண்ணீர்மல்கக் கூறினார். தமது ஆட்சி எதற்காக கலைக்கப்பட்டது என்று அவர் அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பினார்-. ஆட்சியில் லஞ்சம் இருக்கக்கூடாது என்று ஆசைப்பட்டேனே, அது என் தவறா? ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சொன்னேனே, அது என் தவறா? சட்டத்துக்கு முன்னால், நீதிக்கு முன்னால் கட்சிக் கண்ணோட்டம் இருக்கக்கூடாது என்றேனே, அது என் தவறா? கோட்டை வராண்டாவில் அரசியல்வாதிகள் நடமாடக்கூடாது என்றேனே, அது என் தவறா? தவறு செய்தவர்கள் என்னுடைய கட்சிக்காரர்கள் என்றாலும் தயங்காமல் நடவடிக்கை எடுங்கள் என்று காவல்துறையை சுதந்திரமாக இயங்க வைத்தேனே, அது என் தவறா? புயல், வெள்ளம், தீ விபத்து போன்றவற்றில் மக்கள் பாதிக்கப்பட்டபோது ஓடோடிச் சென்று உதவி செய்தேனே, அது என் தவறா? எது தவறு என்று சொல்லுங்கள்? என்ன காரணத்துக்காக ஆட்சியைக் கலைத்தார்கள்?

எம்.ஜி.ஆர். எழுப்பிய இந்த வினாக்கள் மக்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. அதற்கு 3 மாதங்களுக்கு முன்புவரை எம்.ஜி.ஆர். மீது பெரும் கோபத்தில் இருந்த மக்கள், அவரது ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக அவர் மீது அனுதாபம் காட்டினர். அதுமட்டுமின்றி, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் மீது வெறுப்பை உமிழ்ந்தனர்.

தி.மு.க. - காங்கிரஸ் குழப்பம்

மற்றொருபுறம், தி.மு.க. தலைவர் கலைஞர் தேர்தலுக்கு முன்பே முதல்வராகிவிட்டதாக எண்ணி மகிழ்ந்தார்.  அவர் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலரும் முதலமைச்சர் கனவில் மிதக்கத் தொடங்கினார்கள். காரணம் மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றி இதிலும் தொடரும் என்று அவர்கள் எண்ணியதுதான். ஆனால், தொகுதிப் பங்கீட்டிலேயே தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. நீண்ட இழுபறிக்குப் பிறகு தி.மு.க.வும், காங்கிரசும் சரிபாதியாக தொகுதிகளைப் பிரித்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்தன. எந்தக் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெறுகிறதோ அந்தக் கட்சிக்கு முதல்வர் பதவி என்பது எழுதப்படாத ஒப்பந்தமாக இருந்தது.

தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருந்தபோது, எம்.ஜி.ஆர். ஒரு அணுகுண்டை வீசினார். எங்கள் அணி வெற்றிபெற்றால் நான்தான் முதலமைச்சர், தி.மு.க. & காங்கிரஸ் கூடணி வெற்றிபெற்றால் யார் முதலமைச்சர்? என்ற வினாதான் அவர் வீசிய அணுகுண்டு ஆகும். அந்த வினாவுக்கு தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் யாராலும் பதில் கூறமுடியவில்லை. அதுமட்டுமின்றி, அதிக இடங்களில் வெற்றிபெறும் கட்சிக்குத்தான் முதலமைச்சர் என்று எழுதப்படாத ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருந்ததால், இரு கட்சியினரும் தாங்கள் அதிக இடங்களில் வெற்றிபெறவேண்டும் என்று துடிப்பதற்கு பதிலாக, தங்கள் கூட்டணி கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றுவிடக் கூடாது என்று துடித்தனர்.

அதிமுகவுக்கு வெற்றி!

தேர்தல் நெருங்க அதிமுக அணிக்கு செல்வாக்கு அதிகரித்தது. 1980ஆம் ஆண்டு மே மாதம் 28 முதல் 31 வரை நடைபெற்ற தேர்தலில் அதிமுக 129 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் தக்க வைத்துக்கொண்டது. அவரது கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகள் 33 இடங்களை வென்றன. தி.மு.க. அணியில் தி.மு.க. 37 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும் பெற்று படுதோல்வி அடைந்தன. இதைத் தொடர்ந்து 9.6.1980 அன்று 2வது முறை முதலமைச்சராக பதவியேற்றார் எம்.ஜி.ஆர்.

                                                       

"ஐ.நா ஆணையத்தில் இலங்கையை தண்டிக்க இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும்!" -------------------------- மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அறிக்கை

"ஐ.நா ஆணையத்தில் இலங்கையை தண்டிக்க இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும்!"
--------------------------
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அறிக்கை
--------------------------

ஜெனிவா நகரில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை இறுதிப்போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்காக அந்நாட்டு அரசின் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் தாக்கல் செய்துள்ளார். இதனடிப்படையில் இலங்கை மீதான விவாதம் மார்ச் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்கான இலங்கையின் செயல்பாடுகள் மனநிறைவு தரவில்லை  என்றும் ஆணையர் அவரது அறிக்கையில் கூறியுள்ளார். ‘‘இலங்கையின் ஒப்புதலுடன் 2015-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை, கவலைக்கொள்ளும் அளவுக்கு மிகவும் காலதாமதம் செய்யப்பட்டுள்ளது. ஐநா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கை அதிபர், பிரதமர், அமைச்சர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுவது கண்டிக்கத்தக்கது. இனியும் தாமதிக்காமல் தீர்மானத்தை செயல்படுத்த  திட்டம் வகுக்கப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இலங்கையில் அமைப்பு ரீதியில் நடத்தப்பட்ட பன்னாட்டு குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளைக் கொண்டு கலப்பு நீதிமன்றம் அமைப்பது கட்டாயமான தேவை. இத்தகைய குற்றங்களை விசாரிக்கும் வகையில் உள்நாட்டு சட்டங்களை உடனடியாக மாற்ற வேண்டும். மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களை உடனடியாக திருப்பி அளிக்க வேண்டும், குடிமக்கள் விவகாரங்களில் இருந்து இராணுவம் முழுவதுமாக விலக்கப்பட வேண்டும். இலங்கை அரசின் நடவடிக்கைகளை முழுமையாக செயலாக்க ஐநா மனித உரிமைகள் ஆணையரின் நேரடி அலுவலகத்தை இலங்கையில் நிறுவ வேண்டும். போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலையை விசாரிப்பதற்கான ரோம் உடன்படிக்கையில் இலங்கை உடனடியாக கையொப்பம் இடவேண்டும். இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஐநா மனித உரிமை ஆணையர் பரிந்துரைத்துள்ளார்.

2015 ஆம் ஆண்டின் பேரவை தீர்மானத்தில் நிலைமாற்ற நீதி பொறிமுறை என்பதை இலங்கை அரசு ஏற்றது. இதில் உண்மையை வெளிக்கொணர்தல், குற்றவாளிகளைத் தண்டித்தல், இழப்புகளுக்கு பரிகாரம் தேடுதல், குற்றம் நடந்ததற்கான காரணங்களைக் கண்டுபிடித்து அமைப்புகளை மாற்றுதல் என நான்கு அங்கங்கள் உள்ளன. ஆனால், உண்மை, பரிகாரம் என இரு வழிமுறைகளை மட்டுமே இலங்கை அரசு ஓரளவுக்கு ஏற்பது போன்று தெரிவதாகவும், குற்றவாளிகளைத் தண்டிக்காமல் தவிர்க்க முயல்வதாகவும் ஆணையர் குற்றஞ்சாற்றியிருக்கிறார். இலங்கை அரசே அமைத்த ஆலோசனைக் குழுவின் அறிக்கையை ஏற்று செயல்படுத்த வேண்டும் என்றும் இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்காமல் ஏமாற்ற இலங்கை அரசு நடத்தும் நாடகம் மனித உரிமை ஆணையர் அறிக்கை மூலம் தெளிவாகியுள்ளது. இதற்கு மேலும் இலங்கை அரசின் ஏமாற்று சதிகளுக்கு சர்வதேச சமூகம் பலியாகக் கூடாது. 2015-ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், ஒருசிலவற்றை மட்டும் நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மாறாக, மனித உரிமை பேரவையின் நடவடிக்கைகளை தீவிரமாக்குவதுடன், ஐநா பொது அவைக்கும், பாதுகாப்பு மன்றத்துக்கும் இலங்கை விவகாரத்தை கொண்டு செல்ல வேண்டும்.

குறிப்பாக, இலங்கையை காப்பாற்றும் முயற்சிகளில் இந்தியா இனியும் ஈடுபடக்கூடாது. மாறாக,  நீதியின் பக்கம் நிற்க முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, ஐ.நா. மனித உரிமை பேரவையில் 2015-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தின் அம்சங்களை நிறைவேற்றாமல் காலந்தாழ்த்தும் இலங்கை அரசைக் கண்டிக்கும் வகையிலான தீர்மானத்தை இந்திய அரசே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள - பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் அமைப்பது உள்ளிட்ட - அனைத்து பரிந்துரைகளையும், உரிய காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதற்கான செயல்திட்டத்தையும் இந்திய அரசு அதன் தீர்மானத்தில் முன்வைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் போன்ற பன்னாட்டு அமைப்புகளில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. இத்தகைய சூழலில், மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அம்சங்களை இலங்கை அரசு செயல்படுத்துவதை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் தொடர்ச்சியாக கண்காணிப்பதையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் மனித உரிமைப் பேரவையில் விவாதிப்பதையும் உறுதி செய்யும்படி இந்தியத் தீர்மானம் வலியுறுத்த வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக, இலங்கை இறுதிப்போரில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட  போர்குற்றங்களுக்கு நீதி பெற்றுத் தரும் நோக்குடன், இலங்கை சிக்கலை ஐநா பொது அவையின் மூலம் ஐநா பாதுகாப்பு மன்றத்துக்கு கொண்டு செல்லும்படியும் ஐநா மனித உரிமை பேரவையை இந்தியா கோர வேண்டும்.

ஈழத் தமிழர்கள் இந்தியாவை தந்தை நாடாக கருதுவதாலும், ஈழத்தமிழரை தொப்புள் கொடி உறவாக இந்தியத் தமிழர்கள் கருதுவதாலும் அவர்களுக்கு நீதிபெற்றுத் தருவதற்கான தார்மீக கடமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு உண்டு. ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில்  பொருத்தமான தீர்மானத்தைக் கொண்டு வந்து நட்பு நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றுவதன் மூலம் இந்தக் கடமையை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! தி.மு.க. காங்கிரசின் சந்தர்ப்பவாதக் கூட்டணியும், அதிமுகவின் தோல்வியும்! -மருத்துவர். இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!

தி.மு.க. காங்கிரசின் சந்தர்ப்பவாதக்
கூட்டணியும், அதிமுகவின் தோல்வியும்!
   -மருத்துவர். இராமதாஸ்

அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, பகைவரும் இல்லை என்பதற்கு நிரந்தர உதாரணமாக அமைந்த தேர்தல் 1980-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் தான். அதேபோல், எம்.ஜி.ஆர் தலைமையிலான கோமாளிக்கூத்து ஆட்சிக்கு பாடம் புகட்டியதும் அந்த தேர்தல் தான்.

1979-ஆம் ஆண்டு தமிழகத்தில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையை எம்.ஜி.ஆர் அரசு கொண்டு வந்தது குறித்தும், அதைத் தொடர்ந்து அதிமுக-திமுகவை இணைக்க நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது குறித்தும் கடந்த அத்தியாயத்தில் விரிவாக விளக்கியிருந்தேன். இட ஒதுக்கீடு குறித்த எம்.ஜி.ஆரின் முடிவு தான் 1980-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவருக்கு தோல்வியை வாங்கித் தந்தது. அதுபற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன், 1977-ஆம் ஆண்டில் நடைபெற்ற மிகப்பெரிய அரசியல் வன்முறைத் தாக்குதல் குறித்து குறிப்பிட்டாக வேண்டும்.

இந்திராவுக்கு கருப்புக்கொடி

1977-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனதாக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்த 2 மாதங்களில், காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தி தமிழகத்தில் சுறுப்பயணம் மேற்கொண்டார். இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காரணமாக ஆட்சியை இழந்ததுடன், அடக்குமுறைக்கும் ஆளான திமுக, அதற்காக இந்திரா காந்திக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 29.10.1977 அன்று மதுரை வரும் இந்திரா காந்திக்கு கருப்புக்கொடி காட்டப்போவதாக அறிவித்திருந்தது.

திமுகவின் இந்த போராட்ட அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக மீது சர்க்காரியா ஆணைய விசாரணை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் பாய்ந்ததால், அதிலிருந்து தப்புவதற்காக மொரார்ஜி தேசாய் அரசை குஷிப்படுத்தும் வகையில் இந்திரா காந்தி மீது தாக்குதல் நடத்த திமுக சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும் செய்திகள் பரவின. இதையடுத்து சென்னையில் இந்திரா காந்தி செல்லும் இடங்களில் எல்லாம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆனாலும், அதையும் தாண்டி  இந்திரா காந்தி மீது மிகப்பெரிய கொலைவெறித் தாக்குதலை திமுகவினர் நடத்தினார்கள்.

அந்த தாக்குதல் குறித்து அதில் காயம்பட்டவரான, அப்போதைய தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளரும், இப்போதைய தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவருமான நெடுமாறன் விளக்குகிறார்....

கொலைவெறித் தாக்குதல்

‘‘ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் இந்திரா மதுரைக்கு வருகை தந்தார். அவசர நிலை முறைகேடுகளுக்காக அவருக்குச் செல்லுமிடங்களிலெல்லாம் கறுப்புக்கொடி காட்டப் போவதாக தி.மு.க. அறிவித்தது. ஆனால் உண்மையான காரணம், இந்திரா காந்திக்கு கறுப்புக் கொடி காட்டுவதன் மூலம் பிரதமர் மொரார்ஜியை திருப்திப்படுத்தி சர்க்காரியா கமிசன் விசாரணை பின்விளைவுகளிலிருந்து தப்பிப்பதுதான்.

இந்திரா அன்று மதுரை ரேஸ்கோர்ஸ் திடலில் பேசுவதாக இருந்தது. தி.மு.க.வினர் கறுப்புக்கொடி காட்ட மிக "பலமான' ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். நகரமே கொந்தளிப்பாக இருந்தது. விமான நிலையத்துக்கு இந்திராவை வரவேற்கப்போனபோதே, நான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தேன். அவரை வரவேற்று திறந்த காரில் பின்சீட்டுக்குப் பின்னால் உள்ள இடைவெளியில் தலையணைகளைப் போட்டு, இந்திராவை அமர வைத்தோம். காரில் நான், மரகதம் சந்திரசேகர், ஆர்.வி. சுவாமிநாதன், சித்தன் ஆகியோர் இருந்தோம். வழியெங்கும் மக்களைப் பார்த்துக் கையாட்டிக்கொண்டே வந்தார் இந்திரா. கார், தெற்கு வெளி வீதிக்குள் திரும்பியது.

காயமின்றி தப்பினார்

திடீரென்று, நாங்கள் வைத்திருந்த வரவேற்பு வளைவு கீழே தள்ளப்பட்டது. கார் மேலே போக முடியாமல் நின்றது. கறுப்புக் கொடி களுடன் திரண்டிருந்த தி.மு.க.வினர் இந்திராவைத் தாக்குவதற்குப் பாய்ந்தார்கள். ஆபத்தை உணர்ந்த நான் சில நொடிகளுக்குள் இந்திராவை பின்சீட்டில் படுக்க வைத்து அவர் மீது தலையணைகளை அமுக்கி, மேலே நான் படுத்துக் கொண்டேன். தடிகளுடன் பாய்ந்து வந்த தி.மு.க.வினர், தாக்கத் தொடங்கினர். தலையணைகளுக்கு அடியில் இருந்த இந்திரா மீது ஒரு அடி கூட விழாமல் அனைத்தையும் நான் வாங்கிக் கொண்டேன்.

காவல் துறையினர் கூட காப்பாற்ற நெருங்க முடியாத வகையில், தி.மு.க.வினர் காரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டனர். பல நிமிடங்கள் என்மீது தாக்குதல் நீடித்தது. முதலில் திகைத்துப்போன ஓட்டுநர் ஜான், அப்புறம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அந்த ஆபத்தான சூழலிலும், காரை நடைமேடை மீது ஏற்றி, தி.மு.க.வினருக்கு இடையில் காரை விரைவாகச் செலுத்தி, சம்பவ இடத்திலிருந்து, புத்திசாலித்தனமாக வெளியே வந்தார்.

ஆபத்தில்லாத இடத்துக்கு கார் வந்த பிறகு, ‘‘இந்திராவுக்கு என்ன ஆயிற்று?’’ என்று பார்க்க தலையணைகளை நீக்கி விட்டு அவரை எழுந்து உட்காரச் சொன்னேன். அவரது புடைவையில் ஒரே ரத்தம். இவ்வளவு பாதுகாப்புக் கொடுத்தும் அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதே என்ற பதைபதைப்பு எனக்கு ஏற்பட்டு விட்டது. ஆனால், இந்திராவுக்கு அடி எதுவும் படவில்லை. எனது தலையில்தான் பலத்த தாக்குதல் நடந்திருக்கிறது. அதிலிருந்து வழிந்த ரத்தமே இந்திராவின் புடைவையை நனைத்திருந்தது.
எனக்கு அடிபட்டிருக்கிறது என்பதைப் பார்த்ததும் இந்திரா மிகவும் கவலைப்பட்டுப் போய்விட்டார்.

‘‘ஆஸ்பத்திரிக்குப் போங்க’’ என்று ஓட்டுநருக்குக் கட்டளையிட்டார். ஆனால் இந்திராவை வைத்துக்கொண்டு மேலும் தெருக்களில் பயணம் போவது ஆபத்து என்பதால், ‘‘நீ சர்க்கியூட் ஹவுஸ் போப்பா’’ என்று ஓட்டுநரிடம் கண்டிப்பாகச் சொன்னேன். இந்திராவை சர்க்கியூட் ஹவுசில் பத்திரமாகச் சேர்த்துவிட்டு மருத்துவமனைக்குப் போய் கட்டுப்போட்டுக்கொண்டு மீண்டும் அவரைச் சந்தித்து கூட்டத்தில் அவருடன் கலந்து கொண்டேன்’’ என்று  பழ. நெடுமாறன்  விளக்கினார்.

இது 1977-ஆம் ஆண்டில் நடந்த முன்கதை சுருக்கம். அதன்பின்னர் இரு ஆண்டுகளில் மத்தியில் ஜனதாக் கட்சி அரசு கவிழ்ந்து விட, மக்களவைக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். யார், யாருடன் கூட்டணி சேருவார் என்று யூகிப்பதே கடினமாக இருந்தது. அந்த வேளையில் 1979-ஆம் ஆண்டு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் அதிமுக, திமுக இணைப்பு குறித்து பேசப்பட்டிருந்ததால், செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் அது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், நடந்ததோ வேறு....

திமுக- காங்கிரஸ் கூட்டணி

இரு ஆண்டுகளுக்கு முன் எந்த இந்திரா காந்தியை பழிவாங்க வேண்டும் என்ற உணர்வுடன் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டாரோ, அந்த இந்திரா காந்தியின் வீட்டில் கலைஞர் அமர்ந்திருந்தார். இருவரும் பேச்சு நடத்தில் கூட்டணியை அறிவித்தனர். இந்தக் கூட்டணியை ஏற்றுக் கொள்ள மக்கள் தயாராக இல்லை.
ஆனால், மத்தியில் இரு ஆண்டுகள் நடைபெற்ற ஜனதாக் கட்சி ஆட்சியில் நடைபெற்ற அவலங்களும்,  எம்.ஜி.ஆர் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட கூத்துக்களும் ஜனதாக் கட்சி மீதும், அதிமுக மீதும் மக்களிடையே வெறுப்பை விதைத்திருந்தன. இதையெல்லாம் உணராத எம்.ஜி.ஆர் ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்தார்.

நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக!

மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்று மக்களிடம் எதிர்பார்ப்பு நிலவுவதை அறிந்த கலைஞர், அருமையான முழக்கம் ஒன்றை உருவாக்கினார். ‘‘நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக!’’ என்பது தான் அந்த முழக்கம். இது மக்களிடம் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. ஆனாலும் திமுகவினரிடையே நம்மை தாக்கிய இந்திராவுடன் கூட்டணியா? என்ற தயக்கம் இருந்தது. உடனடியாக நெருக்கடி கால நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கேட்டார் இந்திரா. திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவடைந்தது.

மற்றொரு புறம், எம்.ஜி.ஆர், ஜனதா கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை. அதுமட்டுமின்றி, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அறிவித்த எம்.ஜி.ஆர் மீது மக்கள் கோபத்துடன் இருந்தனர். அதன் விளைவு.... 1980 ஆம் ஆண்டு ஜனவரி 3&ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 39 இடங்களில், கோபிச்செட்டிப் பாளையம், சிவகாசி தவிர மீதமுள்ள 37 இடங்களிலும் ஆளுங்கட்சியான அதிமுக படுதோல்வி. திமுக போட்டியிட்ட 16 இடங்களிலும் வென்றது. காங்கிரஸ் 22 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களை வென்றது.  ஓரிடம் முஸ்லீம் லீகுக்கு கிடைத்தது. மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பார்த்து வெறுத்துப் போனார் எம்.ஜி.ஆர். இந்திராவை பகைத்துக் கொண்டதை நினைத்து அவர் வருந்தினார். அவரது வருத்தங்கள் தொடர்ந்தன....